Close
நவம்பர் 24, 2024 5:12 மணி

திருச்சி ஜேகேநகரில் புதிய ரேஷன் கடை திறந்து வைத்த இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ

திருச்சி ஜேகேநகரில் புதிய நியாயவிலைக்கடையை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மாநகராட்சியின் மண்டலம் நான்கு 61- வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர். திருச்சி மாநகரின் விரிவாக்க பகுதிகளில் ஒன்றான  இப்பகுதியில் வனத்துறை மண்டல அலுவலகம், குடிநீர் வடிகால் வாரிய மண்டல பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு மையம் உள்ளன. ஜேகே நகர், ஜேகேநகர் விரிவாக்கம், திருமுருகன் நகர், முகமது நகர், ஆர்எஸ்புரம், ராஜகணபதி நகர், பாரதி நகர் விரிவாக்கம், ஆர்.வி.எஸ். நகர் உள்ளிட்ட இப்பகுதியில் அரசு ஊழியர்கள்,  ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்கள்,மின்வாரிய ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், பாய்லர் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள்.

திருச்சி மாநகராட்சி சார்பில் இப்பகுதியில் சமீபத்தில் பாதாள சாக்கடை பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. வீடுகளுக்கு தான் இன்னும் இணைப்பு மட்டும் கொடுக்கப்படவில்லை . மாநகராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்றும் இங்கு தான் உள்ளது.

ஜே.கே. நகர் மற்றும் அதன் விரிவாக்க பகுதிகளில் வசிக்கும்  மக்கள் தங்களது குடும்ப அட்டைகளுக்கு தேவையான பொருட்களை காந்திநகர், காஜாமலை, மற்றும் டி.வி.எஸ். நகர் ஆகிய இடங்களில் உள்ள நியாய விலை கடைகளில் தான் வாங்கி வருகிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே இடத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில் திருச்சி ஜே.கே. நகரில் ரேஷன் கடை ஒன்று அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையாகும்.

இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும்  நிறைவேற்றப்படாத சூழலில் இறுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  இனிகோ இருதயராஜிடம் இப்பகுதி வாழ் மக்கள் சார்பில் கடந்த 10-9-2022 அன்று  தங்களுக்கு ஒரு ரேஷன் கடை கட்டி கொடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உடனடியாக தனது சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நியாய விலை கடை கட்டுவதற்கு பன்னிரண்டரை லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். நிதி ஒதுக்கீடு செய்தது மட்டுமல்லாமல் நியாய விலை கடை அமைப்பதற்கான இடத்தையும் ஜே. கே. நகர் பூங்கா அருகில் தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கின.

கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரிப்பன் பட்டி புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு குத்து விளக்கு ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து இந்த நியாய விலை கடையில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வழங்கினார்.

இவ்விழாவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜாபர் அலி, மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா, ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் உள்பட அதிகாரிகள், அலெக்ஸ் ராஜா உள்பட பிரமுகர்கள், நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவரிடம் பொதுமக்கள் தரப்பில் திருச்சி ஜே.கே. நகருக்கு தற்போது  88 ஏ என்ற ஒரு பேருந்து மட்டுமே வந்து செல்கிறது. பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு தனியார் நிறுவன ஊழியர்களின்  நலன் கருதி கூடுதலாக இரண்டு பஸ்கள் இயக்குவதற்கு ஆவன செய்ய வேண்டும், மேலும் தாங்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதி படி திருச்சி கொட்டப்பட்டு குளத்தை முழுவதுமாக தூர்வாரி தற்போது குளத்தின் மேல் புறத்தில் மட்டும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது போல் நான்கு புறமும் நடைபாதை அமைத்து அதனை ஒரு சுற்றுலா மையமாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அப்போது அவர்களிடம் உறுதி அளித்தார்.

ரேஷன் கடை திறந்து வைத்து இருப்பதன் மூலம்  தங்களது கால் நூற்றாண்டு கனவை நிறைவேற்றி கொடுத்து இருப்பதாக இப்பகுதி மக்கள் அப்போது அவருக்கு மீண்டும் நன்றி தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top