Close
நவம்பர் 24, 2024 7:07 காலை

சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் ரோப்கார் சேவையை துவக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்

சோளிங்கர் பகுதியில் 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்குச் செல்ல மலையடிவாரத்திலிருந்து சுமார் 1,306 படிக்கட்டுகள் மலை படியேறி பக்தர்கள் லட்சுமி நரசிம்மரை தரிசித்து வந்தனர். இதன்காரணமாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள்

பெரும்பான்மையான பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதன் காரணமாக அந்தக் கோயில் அடிவாரத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல ரோப்கார் அமைத்துத் தர வேண்டும் எனக் கடந்த 25 ஆண்டுக்கு மேலாக அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசால் ரோப்கார் அமைக்கும் பணியானது ரூ.9.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வந்தது. மேலும் ரூ. 11 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிக்காக கட்டுமான பணிகளும் நடைபெற்ற வந்த நிலையில் இரண்டு பணிகளும் தற்போது முடிவடைந்தது.

மலை அடிவாரத்திலிருந்து ரோப் கார் வாயிலாக மலைக் கோயிலுக்குச் செல்ல 3 முறை ரோப்கார் சோதனை ஓட்டத்திற்குப் பின்பு, இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்காக சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கொடியசைத்துத் துவக்கி வைத்ததோடு ரோப்காரில் பக்தர்களோடு இணைந்து பயணித்து லட்சுமி நரசிம்மர் சுவாமியை தரிசனம் செய்தார்.

ரோப்கார் சேவை துவங்கப்பட்டதைத் தொடர்ந்து சோளிங்கர் பகுதியில் உள்ள பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top