Close
நவம்பர் 23, 2024 1:47 மணி

நாமக்கல் லோக்சபா வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் போட்ட கண்டிஷன்

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஆன்மீக இந்து சமயப் பேரவை, ஆன்மீக இந்து கூட்டமைப்பு, இந்து சமயப் பேரவை மற்றும் பொதுமக்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விபரம்:
நாமக்கல் கோட்டை ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி தாய்சேய் நல விடுதி, போக்குவரத்திற்கு இடையூறான இடத்தில் அமைந்துள்ளது. மேலும் அப்பகுதியில் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம், வண்டி வாகனங்கள் கூட்டம், கோட்டை பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள் கூட்டம் போன்றவற்றால், நோயாளிகள் தடுமாறும் நிலை உள்ளது. எனவே நகரத்தின் மையத்தில், மோகனூர் ரோட்டில், காலியாக உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை கட்டித்திற்கு, தாய்சேய் நல விடுதியை மாற்றி, அங்கு மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்படுத்த வேண்டும்.
நாமக்கல் பகுதியில் ஒவ்வொரு வீதியிலும், தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடியால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தெருநாய்களால், சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு, கை, கால் முறிவு மற்றும் உயிரிழப்பு நேரிடுகிறது.
பல விவசாய தோட்டங்களில் மயில்களால் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மயில்களால் விவசாய பயிர்கள் அழிவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பள்ளிபாளையம், பவானி, ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களில் வெளியாகும் சாயக்கழிவை தூய்மை படுத்தாமல் ஆறுகளில் கலந்து வரும் நீரை மக்கள் குடிப்பதால், நாமக்கல் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. நதிகளை தூய்மையாக்கி சுத்தமான குடிநீர் வழங்கிட உயர் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
நாமக்கல் நகரில், தொல்லியியல் துறை சார்ந்த பல கோயில்களை, இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வாகித்து வருகின்றனர். சரியான முறையில் தொல்லியியல் துறையையும் இந்து அறநிலைத்துறையும் இணைந்து செயல்பட முடியாமல் கோயில்கள் சிதிலமடைந்து வருகின்றன. இதில் நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் சிறப்பு பெற வழிவகை கண்டு ஆக்கிரமிப்புகளை நீக்கி கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
நாமக்கல் நகரில் இருந்து கிராமங்களுக்கு செல்வதற்கு, போதுமான டவுன் பஸ் வசதி இல்லை. ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த பல தனியார் மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால், டவுன் பஸ்களில் ஏராளமான பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, எருமப்பட்டி, வலையப்பட்டி, ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் டவுன் பஸ்வசதியை அதிகப்படுத்தவேண்டும். நாமக்கல் நகரில் ஆயிரக்கணக்கான லாரிகள் உள்ளன. லாரிகள் நிறுத்துவதற்கு நகராட்சி சார்பில் லாரி ஸ்டேண்டு அமைத்துக் கொடுக்க வேண்டும்.
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், நாமக்கல் நகர பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை தங்களின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்க வேண்டம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top