நாமக்கல்:
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மோகனூரில் நடைபெற்ற குதிரை ரேக்ளா போட்டியில், உறையூர் குதிரை முதல் பரிசை வென்றது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்டம், மோகனூர் ஒன்றியம் மற்றும் டவுன் பஞ்சாயத்து தி.மு.க., சார்பில், மாடு மற்றும் குதிரை பந்தயம் நடைபெற்றது. நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், ஒத்தை மாடு பந்தயத்தை துவக்கி வைத்தார்.
மோகனூர் டவுன் பஞ்சாயத்து தி.மு.க., செயலாளர் செல்லவேலுக்கு சொந்தமான மாடு முதல் பரிசு பெற்றது. கோவை ரவி மாடு, இரண்டாமிடம், சேலம் வைத்தி குரூப்ஸ் மாடு மூன்றாமிடம் பெற்றது.
புதிய குதிரை போட்டியில், பவானி பிரவீன் முதல் பரிசு, கோவை மாசாணியம்மன் குதிரை 2ம் பரிசும், பவானி எழில் பிரதர்ஸ் 3ம் பரிசும் பெற்றன. சிறிய குதிரைகளுக்கான போட்டியில், குளித்தலை கிமிலன் முதல் பரிசும், சேலம் கொம்பன் இரண்டாம் பரிசும், சென்னை முகமது அலி மூன்றாமிடம் பிடித்தனர். தொடர்ந்து நடந்த பெரிய குதிரை போட்டியில், உறையூர் விஜயா முதல் பரிசும், சென்னை ஜெயா நரேஷ், குளித்தலை மீசை மாணிக்கம் என, முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.
பரிசளிப்பு விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்.
எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவலடி, டவுன் பஞ்சாயத்து செயலாளர் செல்லவேல், டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், முன்னாள் தலைவர் உடையவர், திமுக நிர்வாகிகள் மற்றும் திரளானபொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.