Close
நவம்பர் 24, 2024 5:13 காலை

வாக்குகள் குறைந்தால் யார் பொறுப்பேற்க வேண்டும்? மு.க.ஸ்டாலின் கூறுகிறார்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் இன்று திமுக சார்பில் 21 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் நடைபெற உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திமுக மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு க ஸ்டாலின் பேசியதாவது:
நம்முடைய கூட்டணிக் கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமாக நம்முடன் கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள்.

அதனால் நட்புணர்வோடு கலந்து பேசி தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம். சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில் இது இயல்பானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியின் நலன் தான் முக்கியம்; தமிழ்நாட்டோட நலன் முக்கியம்; நாட்டோட எதிர்காலம்தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி தேர்தல் பணியாற்ற வேண்டும்.

மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளைக் கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு அவர்களையே சாரும்.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு.தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய, நகரம்,பகுதி, பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன். எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்பவே சொல்லி விடுறேன். இதை ரொம்ப கண்டிப்போடும் சொல்கிறேன்.

எல்லா தொகுதியிலயும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் மேலோங்கி இருக்க வேண்டும். தோழமைக் கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும். போஸ்டர்கள், துண்டறிக்கைகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களும் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வேட்பாளர் யாராக இருந்தாலும் அரவணைத்து மக்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.
வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதுதான் ரொம்ப முக்கியம். மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும். இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களை தமிழ்நாட்டில் விதைக்கலாம் என்ற எண்ணமே, இனிமேல் பாசிச வெறிபிடித்த பா.ஜ.க.வுக்கு கனவிலேயும் வரக்கூடாது. அப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை நாம் பெற வேண்டும்.

புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி.  ஜூன் 4-ஆம் தேதி நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற செய்தியோடு வந்து என்னைச் சந்தியுங்கள், என்று மு க ஸ்டாலின் பேசினார்.

செய்தி: நாராயணசுவாமி.மு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top