Close
நவம்பர் 22, 2024 2:37 காலை

மக்களவை தேர்தல்: மதுரை தொகுதி ஒரு பார்வை!

சினிமா என்றாலும், அரசியல் மாநாடு என்றாலும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நகரமாக மதுரை விளங்குகிறது.

பாண்டியர்களின் தலைநகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை, மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில், 6-ம் படை வீ்டான பழமுதிர்சோலை, காந்தி மியூசியம், திருமலைநாயக்கர் மகால், பாய்ந்தோடும் வைகை, ஆன்மிகம் சார்ந்த சுற்றுலா தலங்கள் என்று மதுரை மாவட்டம் வரலாற்றில் தொன்று தொட்டு இடம்பெற்று வருகிறது. சிவபெருமான் தனது 64 திருவிளையாடல்களை மதுரையில் நிகழ்த்தியாக நம்பப்படுகிறது. அதே போல் தேச சுதந்திர போராட்டத்துக்காக பல தலைவர்களை, இந்த மாவட்டம் தந்திருக்கிறது. அப்பழுக்கற்ற அரசியலுக்கு சொந்தக்காரரான கக்கனும் மதுரையின் முன்னாள் எம்.பி.தான்.

இசைவாணி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்ததும் இதே மதுரைதான். அனைத்துதரப்பு மக்களுடன் ஆலய பிரவேசம் நடந்து அகில இந்தியாவை திரும்பிப்பார்க்க வைத்த நகரமும் மதுரைதான்.

பல சிறப்புகளை கொண்டிருக்கும் மதுரையில் இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவும், தேர்தல் திருவிழாவும் களைகட்ட தொடங்கிவிட்டது. தமிழக அரசியலில் திருப்புமுனை நகரமாகவும், அரசியல் மாற்றத்தை தீர்மானிக்கும் நகராகவும் மதுரை கருதப்படுகிறது.

மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது மதுரை மக்களவை தொகுதி.

1951-52ல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில், மதுரை இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதிகளாக இருந்தது. அதில் பொது தொகுதி உறுப்பினராக பாலசுப்ரமணியமும், தலித் தொகுதி உறுப்பினராக கக்கனும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வென்றனர்.

மதுரை மக்களவை தொகுதியில் அதிகம் முறை (3) வென்றவர் ஏ.ஜி.எஸ். ராம்பாபு. இவர் இரண்டுமுறை இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாகவும், ஒருமுறை ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகவும் இத்தொகுதியில் வென்றுள்ளார்.

பரபரப்பான அரசியல்வாதிகளாக கருதப்படும் சுப்பிரமணியன் சுவாமி, மு.க. அழகிரி உள்பட பலர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி இதுவரை சென்னைக்கு அடுத்த நிலையில் மதுரையும், கோவையும் தமிழகத்தின் முக்கிய மாநகரங்களாக கருதப்பட்டாலும், சென்னையில் உள்ளது போன்ற பெரு நிறுவனங்களோ, கோவையை போன்று வேலைவாய்ப்பை உருவாக்கவோ மதுரையில் தொழிற்சாலைகள் இல்லை என்பது இத்தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று.

மேலும் கோடை காலங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, அதிக மக்கள்தொகையால் அதிகரித்துள்ள வீடுகளின் வாடகை, சுகாதார சீர்கேடுகள் போன்றவை மதுரையின் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.

மதுரை மக்களவை தொகுதியை அதிக முறை வென்றது காங்கிரஸ் கட்சிதான். இத்தொகுதியை காங்கிரஸ் கட்சி எட்டு முறை வென்றுள்ளது.

அதேவேளையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவை தலா ஒருமுறை மட்டுமே மதுரை நாடாளுமன்ற தொகுதியை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1998-ம் ஆண்டில் அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, மதுரை நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1999 மற்றும் 2004 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பா.மோகன் எம்.பி. ஆனார். 3-வது முறையாக 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. வேட்பாளர் மு.க.அழகிரியிடம் தோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் மு.க.அழகிரி 4,31,295 வாக்குகளும், பி.மோகன் 2,90,310 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மு.க.அழகிரி மத்திய மந்திரி ஆனார்.

2014-ம் ஆண்டில் அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 4,53,785 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி 2,54,361 வாக்குகள் பெற்றார். 50 ஆண்டுகளாக தமிழகத்தை தங்கள் ஆளுமையின்கீழ் வைத்துள்ள தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் தலா ஒருமுறை மட்டுமே மதுரை நாடாளுமன்ற தொகுதியை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்சிகள் இதுவரை மதுரை தொகுதியை பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்துள்ளன.

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையும், கோவையும் தமிழகத்தின் முக்கிய மாநகரங்களாக கருதப்படுகின்றன. ஆனாலும் சென்னையில் உள்ளது போன்ற பெரு நிறுவனங்களோ, கோவையை போன்று வேலைவாய்ப்பை உருவாக்கவோ மதுரையில் போதிய தொழிற்சாலைகள் இல்லை என்பது இத்தொகுதியின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. கோவில் சார்ந்த தலங்கள் மட்டுமே உள்ள நிலையில், பொழுதுபோக்கு அம்சங்களும் மதுரையில் இல்லை.

மதுரை தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எதுவும்  தொடங்கப்படாமல் ஒற்றை செங்கலோடு நிற்கிறது.

மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிகள், வண்டியூர், கோச்சடை உள்ளிட்ட கண்மாய் சீரமைப்பு பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு, வேலைவாய்ப்புக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலையே உள்ளது.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வர்த்தக ரீதியாக அடுத்தக்கட்டத்துக்கு நகரம் வளர்ச்சி அடைய வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். வைகை ஆறு சுத்தப்படுத்தப்பட வேண்டும், ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், ஆன்மிக தலங்களில் உள்ள வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் உள்ளன. இவை எல்லாம் வாக்குறுதிகளாக வழங்கப்படும் என்று தெரிந்தாலும், யார் வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடுகிறதோ, அவர்களின் சின்னத்துக்கே ஓட்டுகள் விழும்.

2019-ம்?ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.வி.ஆர்.ராஜ்சத்யனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

மதுரை மாவட்டத்தில் பரவலாக முக்குலத்தோர் வசிக்கின்றனர். இவர்களை போல நாயக்கர், ஆதிதிராவிடர், நாடார், யாதவர், முதலியார், பிள்ளைமார், மூப்பனார் உள்ளிட்ட சமுதாயத்தினரும், சவுராஷ்டிரா மக்களும், முஸ்லிம், கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர்.

தற்போதைய 2024 தேர்தலில் திமுக கூட்டணியில் மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன், அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், பாஜக-ராம சீனிவாசன்  போட்டியில் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top