Close
மே 10, 2024 12:56 மணி

மக்களவை தேர்தல்: இராமநாதபுரம் தொகுதி ஒரு பார்வை!

‘வானம் பார்த்த பூமி” என்று அறியப்படும் ராமநாதபுரம் தொகுதி.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்டுகிறது.

1951ஆம் ஆண்டு, அதாவது முதல் பொதுத்தேர்தலில் இருந்தே கவனம் பெற்றிருக்கிறது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பொழியும் வடகிழக்குப் பருவ மழையை தவிர, ஆண்டு முழுவதும் வெப்பம் மற்றும் வறண்ட வானிலையே அங்கு காணப்படும்.

ஏர்வாடி தர்கா, இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் ராமேஸ்வரம், இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலமான பாம்பன் பாலம் என பல முக்கிய இடங்களை கொண்டுள்ளது ராமநாதபுரம்.

வறட்சி மிகுந்த மாவ‌ட்டமாகக் கருதப்படும் ராமநாதபுரத்தில், இன்றும் பலரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.

‘தண்ணி இல்லாத காட்டுக்கு’ மாற்றி விடுவேன் என்று இந்த மாவட்டத்தை குறித்து அதிகாரிகள் மிரட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அப்படிக் கூறப்படும் இம்மாவட்டத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.

தண்ணீர் தட்டுப்பாட்டு இன்றும் இத்தொகுதியின் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. இன்றும் அங்குள்ள பெண்கள், தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் செல்கிறார்கள் என்று ஊடக செய்திகளை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு பருவமழை சரியாக பொழியவில்லை என்பதினால், வரும் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பல தசாப்தங்களாக மீன்வளம் மற்றும் மீன்உற்பத்தி அதிகமுள்ள கடலோர மாவட்டங்களில் ராமநாதபுரம் முக்கிய இடம் பெற்றுள்ளது.

ஆனால், இங்குள்ள மீனவர்களின் பிரச்சனை பல தசாப்தங்களாக எந்த அரசாங்கத்தாலும் தீர்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

அவ்வப்போது இங்குள்ள மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிக் கொள்வதும், சிலர் சுட்டுக் கொல்லப்படுவதும், நூற்றுக் கணக்கானோர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் என, ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறது இம்மாவட்டம்.

இலங்கைக்கு தரப்பட்ட கச்சத்தீவினை இந்தியா திரும்பப் பெறவேண்டும் என்பதும், இப்பகுதியில் மீனவர்களுக்கு உள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைமீட்டுத் தர வேண்டும் என்பதும் இந்த தொகுதி மீனவர்களின் நீண்டகால கோரிக்கை. 1974 மற்றும் 1976 ஒப்பந்தத்தின் படி, இந்திய மீனவர்கள், அங்கு மீன்பிடிக்க முடியாது. வலைகளை காய வைக்கவும், இளைப்பாறவும், அந்தோனியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கவும் மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக பல தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், பின்னர் அவர்களது படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படாமல் அவர்கள் மட்டும் விடுவிக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 1951 முதல் 2014 வரை இடைத்தேர்தல் உள்பட 16 தேர்தல்களை சந்தித்திருக்கிறது.

இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்த ஏபிஜே அப்துல் கலாம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

தற்போது ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி (தனி), திருவாடனை, ராமநாதபுரம் மற்றும் முதுக்குளத்தூர் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாகப்ப செட்டியார் வென்றார். கடைசியாக நடைபெற்ற 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக நவாஸ் கனி போட்டியிட்டு வென்றார்.

1991 ஆண்டுவரை பெரும்பாலும் காங்கிரஸ் வசம் இருந்த இத்தொகுதி, பின்னர் திராவிடக் கட்சிகள் வசம் வந்தது. இத்தொகுதியில் காங்கிரஸ் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது.

1951  நாகப்பசெட்டியார் இந்திய தேசிய காங்கிரஸ்

1957  சுப்பையா அம்பலம்     இந்திய தேசிய காங்கிரஸ்

1962  அருணாச்சலம்    இந்திய தேசிய காங்கிரஸ்

1967  எஸ். எம். முகம்மது செரிப்    சுயேட்சை

1971  பி.கே.மூக்கைய்யாத்தேவர்     பார்வார்டு பிளாக்

1977  அன்பழகன்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1980  சத்தியேந்திரன்    திராவிட முன்னேற்றக் கழகம்

1984  வி. ராஜேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரஸ்

1989  வி. ராஜேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரஸ்

1991  வி. ராஜேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரஸ்

1996  உடையப்பன்      தமிழ் மாநில காங்கிரஸ்

1998  வி. சத்தியமூர்த்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1999  கே. மலைச்சாமி  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2004 எம். எஸ். கே. பவானி ராஜேந்திரன்  திராவிட முன்னேற்றக் கழகம்

2009 ஜே. கே. ரித்தீஷ்  திராவிட முன்னேற்றக் கழகம்

2014  அன்வர் ராஜா     அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2019  நவாஸ் கனி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

தற்போதைய 2024 தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணியில்  நவாஸ்கனி, பாஜக கூட்டணியில் ஓ.பி.எஸ் அணி சார்பாக ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top