Close
நவம்பர் 24, 2024 7:09 மணி

‘இனி வருங்காலம் எங்கள் கையில் தான்’ நம்பிக்கையில் திருச்சி சுயேச்சை வேட்பாளர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேடபாளர் தாமோதரன்.

‘இனி வருங்காலம் எங்கள் கையில் தான்’ என திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 18 வது மக்களவையை அமைப்பதற்கான பொதுத் தேர்தலில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது.ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் நாளை மறுநாள் ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது ஓட்டுப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாது நடைபெறும்.

இந்த தேர்தலில் திமுக தலைமையில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களும், அதிமுக,தேமுதிகஉள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், பாஜக -பாமக உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஓட்டு பதிவு நாள்  நெருங்கி விட்டதால் இன்று மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை முடித்து விட்டனர். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 35 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த 35 வேட்பாளர்களில் ஒருவர்தான் எஸ். தாமோதரன்.சுயேச்சை வேட்பாளரான இவர் கிராமாலயா என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். கிராமப்புற மக்களிடம் சுகாதார மேம்பாட்டிற்காகவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிக்காகவும் 35 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார். இதன் காரணமாக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இதனை தனக்கு ஒரு அடையாளமாக பயன்படுத்திக் கொண்டு தாமோதரன் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறங்கினார். வேட்பு மனு தாக்கல் செய்த நாள் முதல் தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக திறந்த ஜீப்பில் வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். அதுமட்டுமல்ல தொகுதியின் அனைத்து மக்களுக்கும் வீடு வீடாக தனது வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்து உள்ளார்.

பொதுவாக சுயேச்சை வேட்பாளர்கள் ஏதாவது தங்களுக்கு ஆதரவு உள்ள பகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு பத்திரிகைகளிலோ ,டிவியிலோ விளம்பரம் செய்துவிட்டு பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் தாமோதரன் இதிலிருந்து சற்று வேறுபட்டுள்ளார். திருச்சி வயலூர் சாலையில் அரசியல் கட்சிகளுக்கு நிகராக தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து உள்ளார். தொகுதியின் அனைத்து கிராமங்களுக்கும்  சென்று பிரச்சாரமும் செய்து முடித்து உள்ளார்.

இந்த பிரச்சாரத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக அவர் கூறுகையில் ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கிராமங்களுக்கு நான் சென்றபோது அங்குள்ள மக்கள் வேட்பாளரா? எந்த கட்சி என்று கேட்டார்கள் நான் கட்சியில்லை அம்மா ,நான் சுயேச்சை வேட்பாளர் என்றதும் சுயேச்சையா வாங்க வாங்க இனி நாங்க சுயேச்சைகளுக்கு தான் ஓட்டு போடலாம் என இருக்கிறோம். உங்க வாக்குறுதியை கொடுங்கள் பார்க்கலாம் என என்னுடைய துண்டு பிரசுரத்தை கையில் வாங்கி பார்த்தார்கள்.

இது போன்ற அனுபவத்தை பல கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் காண முடிந்தது. பொதுவாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார்கள். தேர்தல் காலத்தில் மட்டும் வந்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள். பின்னர் அவர்களை தேடி நாம் தான் அலைய வேண்டும் என்ற மனநிலை மக்கள் மனதில் இருப்பதால் தான் மண்ணின் மைந்தர்களான சுயேச்சை வேட்பாளர்களை ஆதரிக்க முடிவு செய்து விட்டார்கள். இந்த தேர்தலில் எனக்கு கிடைத்த அனுபவம் இனி வருங்காலம் சுயேச்சைகளின் கையில் தான் அதுமட்டுமல்ல மக்களுக்காக யார் சேவை செய்கிறார்களோ அவர்களை மக்கள் அடையாளம் கண்டு வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என்பதுதான் என  நம்பிக்கையாக கூறுகிறார் தாமோதரன்.

மேலும் சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் திருச்சி தொகுதி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகளில் முக்கியமானவை. திருச்சியில் இருந்து இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு நேரடியாக ரயில் வசதி மற்றும் விமான வசதி இயக்க ஏற்பாடு செய்வேன். ஏழை எளிய அனைத்து மக்களுக்கும் உலக தரத்தில் மருத்துவ வசதி கிடைக்க பாடுபடுவேன். தூய்மை பணிகளுக்கான மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவேன். குழந்தைகள் ,பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வருவேன். குப்பைகள் இல்லாத நகரத்தையும் கிராமத்தையும் உருவாக்குவேன்.

கந்தர்வகோட்டையில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாக்குவேன் மற்றும் ஏற்றுமதிக்கு உதவி செய்வேன். புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீட்டெடுத்து தொகுதியில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் .புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக  தரம் உயர்த்தப்பட்டதால்  வீட்டு வரி சொத்து வரி உயர்வால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்தினரின் சிரமங்களை அகற்ற பாடுபடுவேன்.

திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மேம்படுத்தி சுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபடுவேன். நீட் மற்றும் உயர்கல்வி படிப்பிற்கான நுழைவு தேர்விற்காக அதிகமான இலவச பயிற்சி மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்வேன். திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நவீன பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்க பாடுபடுவேன். இவை தாமோதரன் அளித்துள்ள முக்கியமான வாக்குறுதிகளில் சில. தாமோதரன் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் கேஸ் ஸ்டவ் சின்னத்தில்  போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top