திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை கிராமத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் மாணிக்கம் . இவருக்கு 3 சகோதரா்கள். திருமணமாகி வெளியூா்களில் பணியாற்றி வருகின்றனா். மாணிக்கம் பெற்றோருடன் வசித்து வருகிறார். டிப்ளமோ வரை படித்துள்ள மாணிக்கம், தந்தை சேகருடன் சேர்ந்து தங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் 75 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், மாணிக்கத்துக்கு அவரது தந்தை சேகா் 50 சென்ட் விவசாய நிலத்தை கிரையமாக வழங்கினாா்.
இது தொடர்பாக மாணிக்கம் கடந்த பிப்ரவரி மாதம் தேவிகாபுரத்தில் உள்ள இ சேவை மையத்துக்குச் சென்று, தனது பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். அதற்கான அரசு கட்டணத்தையும் செலுத்தினாா்.
இதனையடுத்து, ஆத்துரைச் கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் மற்றும் கிராம உதவியாளர் பூங்கொடி ஆகியோர், மாணிக்கத்தை அழைத்து விசாரணை செய்து ‘பட்டா பெயர் மாற்றம் செய்ய அலுவலகச் செலவிற்கு 3 ஆயிரம் ரூபாய் வேண்டும்’ என்று கேட்டுள்ளனர்.
அதற்கு மாணிக்கம் ‘நான் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய அனைத்து கட்டணத்தையும் கட்டி விட்டேன், நானே ஒரு விவசாயக் கூலி’ என கூறிவிட்டு வந்துள்ளார். மாணிக்கம் பணம் கொடுக்காததால் அவரது மனு 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாம்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆத்துரை கிராம நிா்வாக அலுவலரை கடந்த 3-ஆம் தேதி மாணிக்கம் தொடா்பு கொண்டு கேட்ட போது, ரூ.3,000 பணம் தந்தால் பட்டா பெயா் மாற்றம் செய்து தருவதாகக் கூறினாராம்.
இதனால் மனமுடைந்த மாணிக்கம், திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல் முருகனைச் சந்தித்து, நடந்ததைச் சொல்லி புகார் மனுவை கொடுத்திருக்கிறார்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட விஜிலன்ஸ் டிஎஸ்பி அறிவுறுத்தலின் பேரில், கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசனிடம் ரசாயனம் தடவிய ரூ.3,000-ஐ மாணிக்கம் கொடுத்தாா்.
இதை அங்கு மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த டிஎஸ்பி வேல்முருகன், காவல் ஆய்வாளர் மைதிலி மற்றும் குழுவினர் சுற்றி வளைத்து, விசாரணை செய்து சிலம்பரசனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, சிலம்பரசன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல, கடந்த மாதம்தான் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.