Close
செப்டம்பர் 23, 2024 8:15 மணி

திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பெரியார் வைகை கால்வாயில் இருந்து, திருமங்கலத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வந்த நிலையில் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 20 ஆண்டுகள் கழித்து அதே மாதத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கான நிகழ்ச்சி விக்ரமங்கலத்தில் உள்ள திருமங்கலம் பிரதான நீட்டிப்பு கால்வாயில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, விவசாய சங்க பாசனக்கோட்ட தலைவர் எம். பி. ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் முத்துராமன், கொக்குளம் ஒன்றிய கவுன்சிலர் பேராசிரியர் சிவபாண்டியன், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சிவனாண்டி, பன்னியான் ஊராட்சி மன்றத் தலைவர் காசிநாதன், மாநில விவசாய சங்க துணை தலைவர் பிடி. மோகன்,
ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சிவ அறிவழகன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், திருமங்கலம் பிரதான கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார். நிகழ்ச்சியில், விக்கிரமங்கலம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூக்கன், முதலைக்குளம் பெரிய பூசாரி சிங்கம், கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோவில் காரியதரிசி ராமு, பொதுப்பணித்துறை குபேந்திரன், முதலைக்குளம் கிராம கமிட்டி தவசி பண்ணியான் பாண்டி, பார்வர்ட் பிளாக் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், மகாமுனிசாமி, ரைஸ் மில் ராதா உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உசிலம்பட்டி எம் எல் ஏ ஐயப்பன் மற்றும் விவசாய சங்க கோட்டத் தலைவர் எம்பி ராமன் ஆகியோர் கூறும் போது:
கடந்த 2004 ஆம் ஆண்டு திருமங்கலம் பிரதான கால்வாயில் செப்டம்பர் மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு, கடந்த 20 ஆண்டுகளாக அக்டோபரில் தான் தண்ணீர் திறப்பது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்திய விளைவாகவும் முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதன் பலனாகவும் திட்டமிட்டபடி 20 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பதுடன் முன்கூட்டியே தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தண்ணீர் ஆனது 27 கிலோமீட்டர் தூரம் உள்ள திருமங்கலம் அருகே மறவன்குளம் கன்மாய் வரை சென்று சேர்வதற்காக 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. ஆகையால், அனைத்து கண்மாய்களிலும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என, விவசாயிகளை கேட்டுக் கொள்வதோடு கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் இதற்காக துணை கால்வாய் பல இடங்களில் புதர்மண்டி கிடக்கிறது அதை சீர் செய்து கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேர அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூறினார்கள்.
மேலும், தமிழக அரசிடம் விவசாய சங்க கோட்டத் தலைவர் எம் பி ராமன் தலைமையிலான பிரதிநிதிகள் 8 கோடி மதிப்பீட்டில் புதர்மண்டிக் உள்ள துணைக் கால்வாய்களை சீர்படுத்தி தர நிதி ஒதுக்க வேண்டுமென திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது இதனை தமிழக அரசு பரிசீலித்து திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top