Close
அக்டோபர் 1, 2024 9:42 காலை

லப்பர் பந்து – திரை விமர்சனம்- இங்கிலாந்திலிருந்து சங்கர்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

லப்பர் பந்து- திரை விமர்சனம்

இந்தியாவை மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் காய்ச்சல் வாட்டி வதைத்துள்ள நிலையில், கிரிக்கெட் சார்ந்த திரைப்படத்தில் மூழ்குவதற்கு சிறந்த நேரம் எது என தமிழ் ரசிகர்கள் தேடி அலைந்த நேரத்தில் லப்பர் பந்து திரையரங்குக்கு வந்திருக்கிறது.

விளையாட்டை மையமாக வைத்து வெளிவரும் படங்களின் பட்டியலில் லப்பர் பந்து மற்றொரு நுழைவு போல் தோன்றலாம், ஆனால் அது எளிமையான, அதே சமயம் ஈர்க்கக்கூடிய திரைக்கதையுடன் தன்னை தனித்து நிற்க செய்திருக்கிறது. இது விஷயங்களை மிகைப்படுத்துதல் பற்றியது அல்ல – கிரிக்கெட்டின் வழக்கமான பின்னணியில் ஒரு உணர்ச்சிகரமான மற்றும் அதன் தொடர்புடைய கதையை பின்னுவது பற்றியது.

திறமையான கதைசொல்லல் எவ்வாறு நேர்த்தியான கதையாக திரையில் தோன்றி, அதை தனித்துவமாக்குகின்றன என்பதை திரைப்படம் முடிந்ததும் நீங்கள் பாராட்டுவீர்கள். காதலை மையமாக கொண்டு, கூடவே இரு ஆண்களின் ஈகோ போராட்டத்தை மையமாகக் கொண்ட படம் என்றாலும், சின்ன சின்ன திருப்பங்களினூடாக சாதி மற்றும் சமுதாய இடையீடுகளை வெளிக்கொணர்கிறது.

கிரிக்கெட்டுக்கும், சாதி வேறுபாடுகளுக்கும் இடையே ஒரு தனித்து வமான சம்பந்தத்தை கொண்டு, சாதியின் தாக்கம் எப்படி மனிதர்களின் வாழ்வில் மிதமாகவும், கடினமாகவும் உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.

காதல், பாசம், விளையாட்டு, வீரம், நகைச்சுவை என பல வழமையான கூறுகளுடன் கதைக்களத்தில் பின்னப்பட்டிருக்கின்றன, ஆனால் அது எந்த ஒரு கருப்பொருளிலும் பெரிதாக சாய்வதில்லை. அந்த சமநிலை தான் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிக்க வைக்கிறது.

ஆழமான கருத்துகள், வாழ்க்கைச் சம்பவங்கள், அனைத்தும் இயல்பாக ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சாதி, கலப்பு மணம், பெண்ணுரிமை போன்ற சமூகப் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன. இரத்தம், அரிவாள், சாதி வெறி என எதையும் அதீதமாக காட்டாமல், யாரையும் புண்படுத்தாத வகையில், மிகவும் பக்குவமாக கையாண்ட விதத்தில் இயக்குனரை பாராட்டியாக வேண்டும்.

படத்தில் காதல் மென்மையான மலர் போல இருக்கிறது. இளம் ஜோடிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான பாசத்தை, படம் அழகாகப் பதிவு செய்கிறது. கணவன் – மனைவி இடையே உள்ள நுட்பமான “டிஃபன் பாக்ஸ்” மற்றும் புடவை சட்டை சம்பந்தமான காட்சிகள் காட்டப்படும் தருணங்கள், குறைவான நேரத்தில் வந்து போனாலும், திரை நேரத்தில் நிறைவாக அமைந்து, இளைய தம்பதிகளின் காதலை பின் இருக்கையில் அமர செய்து விடுகிறது.

‘லப்பர் பந்து‘ – அன்பு மற்றும் கெத்து எனும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் கிரிக்கெட்டின் தாக்கமும், அவர்களின் பந்தையத்தில் உருவாகும் ஈகோ பிரச்சனைகளும் அழகாக காட்டப்பட்டுள்ளன. அன்பு கிராமத்தில் முன்னணி பவுலராக இருந்தாலும், தனக்கு நிரந்தரமாக ஒரு அணி கிடைக்காததால் விரக்தியடைந்து கிடக்கிறார். அவரின் காதல் வாழ்விலும் குறுக்கீடு செய்ய கெத்து வருகிறார், இது இருவருக்கும் இடையே நடைபெறும் ஈகோ மோதலை உருவாக்குகிறது.

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் அவர்களுக்கான கதாபாத்திரங்களில் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். தினேஷின் காமெடி நேர்த்தியாகவும், பிணக்கான தருணங்களில் தன்னலமின்றி நடித்துள்ளார்.  ஹரிஷ் கல்யாண் தனது ஈகோ மற்றும் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்கள் கதாபாத்திரங்கள், குறிப்பாக ஸ்வாசிகா, இப்படத்தில் மிகச் சிறப்பாக செய்துள்ளார். பால சரவணன் வழக்கம் போல் சிரிப்பை வரவழைத்தாலும், திரையில் பல இடங்களில், கதைக்கு இதயமாக நிற்பவர் ஸ்வாசிகா தான். அம்மாக்களாக வரும் கீதா கைலாசம், தேவதர்ஷினி மற்றும் ஜானகி ஆகிய மூவரும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், ‘லப்பர் பந்து’ ஒரு நல்ல குடும்பத் திரைப்படம். நன்கு படமாக்கப்பட்ட கிரிக்கெட் காட்சிகள் மற்றும் சமூகப் பிரச்னை களை சமநிலையுடன் கையாளுதல் ஆகியவற்றின் கலவையானது நம் நேரத்தை மதிப்புள்ளதாக ஆக்குகிறது. இந்த படைப்பு ஒரு திரைப்படமாக மட்டுமல்லாமல், சமூக அரசியலையும் முன்வைத்து, மக்களிடையே பல சிந்தனைகளை உருவாக்குகிறது என்றால் மிகையல்ல.
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top