Close
மே 11, 2024 5:58 காலை

மஞ்ஞும்மல் பாய்ஸ் திரைப்படமும்… ஜெயமோகனின் விமர்சனமும்..

தமிழ்நாடு

ஜெயமோகனின் திரை விமர்சனம்

தமிழகத்தில் வெளியான இந்த மலையாளப் படத்திற்கு பெருத்த வரவேற்பு தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் திரைப்பட கலைஞர்கள் மத்தியில்.ஒரு பாமர ரசிகனாக நாமும் அந்த படத்தின் குறை நிறைகளை கூறி கொண்டாடினோம். பல தரப்பிலிருந்தும் பல்வேறு நேர்மறையான விமர்சனங்கள் வந்த போது, எழுத்தாளர் ஜெயமோகனிடமிருந்தும் ஒரு பதிவு.நம்மில் பலரும் அதை வாசித்திருப்போம்.

மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம். இந்தப் பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும்.

குடி குடி குடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது…., என பதிவு நீள்கிறது.

இது தரம் தாழ்ந்த விமர்சனமா அல்லது அறம் சார்ந்த விமர்சனமா என்கிற விவாதத்திற்குள் நாம் போக வேண்டியதில்லை. அவர் பார்த்த, அனுபவித்த மோசமான விஷயங்கள் தான் அவரை இவ்வாறு பேச வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

அவரது விமரிசனத்தின் முதல் பத்தியே இப்படித்தான் துவங்குகிறது. சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை.

ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரசாரம் கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி என சொல்லிவிட்டு தேவையில்லாதவற்றை இந்தத் திரைப்பட விமர்சனத்தில் கலந்து விட்டார்.

சுற்றுலா தலங்களுக்கு செல்லும் நம் இந்திய மக்களில் பலர் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்பது ஒரு மிகப் பெரிய குறைபாடுதான். அதைக் கண்டித்து சொல்ல வேண்டிய இடம் இந்த விமர்சனப் பகுதி அல்ல. அக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும், எழுதப்பட்ட முறையும், அக்கட்டுரை எழுதப்பட்டதற்கான காரணத்தையே சந்தேகத்துட்படுத்துகின்றன.

எல்லோரும் பாராட்டுகிற ஒன்றை கடுமையாக சாடி விட வேண்டும், அதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட வேண்டும் என்கிற அவசரம் தெரிகிறது. இந்த ஒரு விமர்சனத்தின் மூலம் மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளுமளவிற்கு ஜெயமோகனை நம் இலக்கிய உலகம், இருட்டடிப்பு செய்து ஒரு ஓரத்தில் உட்கார வைத்திருக்கவில்லை. ஜெயமோகன் என்கிற பன்முக திறன் பெற்ற ஆளுமையை, அரியாசனம் போட்டு அமர வைத்திருக்கிறோம்.

அவருடைய கருத்தில் என்ன தவறு இருக்கிறது, அவர் ஒட்டுமொத்த நபர்களையும் தவறாக சொல்ல வில்லையே, குடித்துவிட்டு மற்ற உயிர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் நபர்களை தான் பொறுக்கிகள் என்று சொல்லி இருக்கிறார். சிலர் செய்த மோசமான செயல்பாடுகளை அவர் நேரடியாக பார்த்ததை வைத்து தான் சொல்லி இருக்கிறார் என்றெல்லாம் அவரது வார்த்தைகளுக்கு வக்காலத்து வாங்கி விடலாம் எளிதாக.

அவர் குறிப்பிட்டுள்ள வரையற்ற குடிப்பழக்கம், அப்பழக்கத்தை ஒரு சமூக ஏற்புள்ளதாக, சகஜமாக மாற்றுதல், அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, காட்டு விலங்குகள் அடையும் இன்னல்கள் என அனைத்து பிரச்னைகளும் நிச்சயம் கவனிக்கபட வேண்டியவை. மாற்று கருத்துகள் இல்லை.

ஆனாலும் கூட அந்த கட்டுரையில் உள்ள பரந்துபட்ட பொதுமைப்படுத்தல் காரணமாக ஏதோ ஒரு வரியில் அதன் இலக்கிலிருந்து விலகிச் செல்வது போலவும் அல்லது வேறு ஏதோ இலக்கை நோக்கி ஏவப்பட்டது போலவும் தோற்றத்தை உருவாக்குகிறது. தனக்கிருந்த மரியாதையை குறைத்துக் கொண்டார் என்று தோன்றலாம். அதுவல்ல.ஒரு படைப்பின்/நிகழ்வின் மீதான மாறுபட்ட பார்வை என கருதலாம்.

பெரும்பாலானவர்களுக்கு பிடித்த ஒரு படம், எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதை எதிர்த்து விமர்சிக்கும் போது ஒரு அடிப்படை நாகரிகத்துடன் முன் வைக்கப்பட்டிருந்தால் அவர் சொன்ன கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும்.

ஆக சிறந்த படைப்பாளி தன்னை அறிவுஜீவியாக நினைத்து கொண்டு வெறுப்பை கக்கி ஒரு இனத்தையே காரிதுப்பி இருக்கிறார். மலையாளிகள் மட்டுமே சூழலியல் சீர்கேடுகளில் ஈடுபடுவதாக சொல்வது அபத்தம். தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அங்கிங்கெணாதபடி நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

இந்த அங்கலாய்ப்பு அவர் நண்பர்களுடனான உரையாடல் எனில் பரவாயில்லை. சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். அவர் சொன்ன விஷயங்கள் ஏற்புடையதாக இருந்தாலும் சொல்லப்பட்ட விதம், உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அவருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. அவர் தமிழர் என்பதற்காக அவர் என்ன சொன்னாலும் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவரது கருத்து மலையாளிகளையும், மலையாள திரைப்படங்களையும் பொதுவான கண்ணோட்டத்தில் இன ரீதியாக இழிவுபடுத்துவதாக உள்ளது. இன வெறுப்பை உமிழும் ஜெயமோகனின் வார்த்தைகள் வன்மத்தின் உச்சம். இது இரு மாநிலங்களுக்கிடையேயான அரசியல், பண்பாட்டு, கலை ரீதியான சுமூகமான உறவுகளுக்கு பங்கம் விளைவித்து விட கூடும்.

இயற்கை அழகு நிறைந்த மலை வாசஸ்தலங்கள், அருவிகள், கண்காட்சிகள், பூங்காக்கள், சரணாலயங்கள் என கேளிக்கை நிறைந்த பொதுவெளிகளில் கூடும் மக்களில் சிலர், தனி ஒழுக்கத்தை கடைபிடிப்பதில்லை. கண்டிப்பாக அங்கு பொறுப்பற்ற குடிமகன்கள் கூத்தடித்து கொண்டிருப்பார்கள். அவர்களுடைய அநாகரீகமான செயல்கள் சகிக்கும் படியாக இருப்பதில்லை.

நண்பர்கள் உறவினர்கள் ஒன்று கூடும் இடங்களில் கேளிக்கை கூத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அவை வரம்பிற்குள், ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். இப்படி சுற்றுலாத் தலங்களை சீரழித்து, அத்து மீறும் அடாவடி செயல்களை அரங்கேற்றும் சமூக விரோத கும்பல்கள், எந்த சட்டத்தையும் பொருட்படுத்துவதில்லை, எந்த எச்சரிக்கை களையும் பேணுவதில்லை.

கோயில்கள் ஆன்மீகவாதிகளுக்கு என்பது போல, அங்கு வருபவர்களுக்குவகுக்கப்பட்ட சட்டதிட்டங்களை போல இனி வரும் காலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் இயற்கை சுற்றுலா தலங்கள் எல்லாம், சுய கட்டுபாடின்றி குடித்து கும்மாளம் அடிப்பவர்களுக்கான இடம் என்றாகிவிடும். தனி மனித கட்டுபாடு கட்டவிழ்க்கப்படும், தனி மனித ஒழுக்கம் சிதைவுறும்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top