Close
மே 20, 2024 5:50 மணி

 நீர்வழிப் படூஉம் நாவல்..வாசிப்பனுபவம்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

 நீர்வழிப் படூஉம் நாவல்..வாசிப்பனுபவம்

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இருந்து வருகிற, ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டையை சேர்ந்த தேவிபாரதி தனது சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளால் வாசகர்களை ஈர்த்துள்ளார்.இவரது ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது படைப்பின் மீதான எனது முதல் வாசிப்பு இது. எளிய மனிதர்களின் வாழ்வியலையும், வாழ்வின் யதார்த்தத்தையும் அதன் தன்மை மாறாமல் பிரதிபலிப்பதில் கைதேர்ந்த எழுத்தாளர் என்பதை புத்தகத்தின் சில பக்கங்களை புரட்டிய போது உணரமுடிந்தது.

கணியன் பூங்குன்றனாரின் வரிகளை தாங்கி நிற்கும் இந்த புதினத்தின் தலைப்பு, மிக பொருத்தமாக அமைந்துள்ளது. நீர்வழிப் படூஉம் என்பது, நீரின் தன்மையை ஓத்திருத்தல் என்பதாகும். பள்ளம் கண்ட இடமெல்லாம் பாய்ந்தோடும் இயல்பு நீருக்குண்டு. மனிதர்கள் நீர்வழிப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். மனித இயல்பு அதுதான்.

இந் நாவலில் வரும் மனிதர்களும் அவர்களின் பூர்வீகத்திலி ருந்து போக்கிடம் தேடி, வாழ்வின் நிமித்தம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். மனித சமுதாயம் விரிவு கொள்ளக் கொள்ள வாழ்வின் இறுகி வரும் சூழ்நிலையில் இருந்து தப்புவதற்காக, அது இயல்பாக நடக்க தான் செய்யும்.

அதேபோல் அன்றாட நெருக்குதல்களுக்குள் அகப்படும் மனித வாழ்வு, அனுபவ அக அறிவுக்கு பின் தெளிந்து தணிதல் என்பது, கிட்டத்தட்ட நீரின் தன்மையை மனிதர் அடைந்து கொள்கிறார்கள் என கொள்ளலாம். வாழ்வின் கருணை யின்மை என்பதைப் பொருட்படுத்தாமல், அதன் துயரங்க ளைத் தின்றும், அது பிழிந்து தந்த கண்ணீரைப் பருகியும் வாழ்ந்து மறைந்த அவர்களின் நிறைவுற்ற கதையே, நீர்வழிப் படூஉம்.

குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவருடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவைச் சித்தரிக்கும் இந்நாவல் மூலம், குடி நாவிதர்கள் சமூகத்தை நாம் அறிந்து வைத்திருப்பதை விட, அறிந்துக்கொள்ள அதிகம் இருக்கிறது என்கிறார் தேவிபாரதி.
‘பார்பர்’ ‘அம்பட்டன்’ போன்ற பெயர்களில் அழைக்கப்பட்ட நாவிதர் சமூகம் தான் நமக்குத் தெரியும். அவர்கள் சமூகத்தில் அவர்களுக்கென்ற தனி இடத்துடன், அடையாளத்துடன் இருந்திருக்கிறார்கள்.

குடி நாவிதர்கள் இல்லாமல் கல்யாணம், கருமாதி, பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு என எந்த ஒரு காரியமும் நடந்துவிட முடியாது. எந்தெந்த விசேஷங்களுக்கு யார் யாரை, எப்படி அழைக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ‘மருத்துவர்’ என்றொரு பெயருமுண்டு. இன்றைக்கு இருக்கும் ‘ஃபேமிலி டாக்டர்’ என்று சொல்லப் படுபவர்களின் ஆதிவடிவங்கள் எனலாம். வீட்டில் யார் யாருக்கு என்னென்ன நோய், அதற்கான அவசர கால மருத்துவ முறைகள் என அறிந்து வைத்திருந்தார்கள்.

அந்த நேரத்தில் மட்டும் தங்களை அதிகாரம் படைத்த வர்களாகத் தகவமைத்துக் கொள்கிறார்கள். குடியானவர்கள் நாவிதர்களுக்கு பணிவிடை செய்யும் நேரமும் இதுதான். புனைவின் எந்த இடத்திலும் தாங்கள் செய்யும் பணிக்காகக் கழிவிரக்கத்தை கோரவில்லை அவர்கள்.

ஒரு ஊரில் குடி நாவிதன் இல்லாமல் போனால் என்னவாகும் என்று சொல்லப்படுவதற்கு மட்டும் சில பக்கங்கள். அதன் முடிவில் ஒரு நாவிதராவது நமக்குக் கிடைத்துவிட மாட்டாரா என்று ஊரே சேர்ந்து ஊர் ஊராகத் தேடுவது.

இந்தப் படைப்பு எழுதப்பட்டதே இந்தப் பக்கங்களுக்கு தான் என்று நமக்கு தோன்றுகிறது. பொதுவெளியில் நாவிதர்கள் சிகை திருத்தும் தொழிலை மட்டுமே செய்வார்கள் என்ற பிம்பமே பரவியிருக்கிறது. அதனைக் கடந்து குடி நாவிதர்கள் செய்யக்கூடிய பணிகளை ஆசிரியர் பட்டியலிட்டிருக்கிறார்.

திருப்பூருக்கருகில் உள்ள உடையாம்பாளையத்தில் உள்ள குடிநாவிதரான ஆறுமுகம் என்கிற காருமாமாவின் வாழ்க்கைச் சம்பவங்கள், கதைசொல்லியின் பார்வையில் நினைவுகூறலாக விரிந்து செல்கிறது. அவருடைய பிரிந்து போன குடும்பம் அவருடைய இறப்பின் மூலம் ஒன்று சேர்கிறது.
செட்டியாருடன் சென்றுவிட்ட தன் மனைவியைப் பற்றி எந்தவித கவலையும் கொள்ளாத காருமாமா, குழந்தைகள் மீதான அன்பைத் துறக்க முடியாமல் தவிக்கிறார். உறவுகளின் அன்பு பாசம் கருணை என உணர்வுகளின் சிதைவுறும் கணங்களைக் கொண்டதாக நாவலின் முற்பகுதி அமைகிறது.

நாவித மற்றும் பண்ணையக்கார சமூகத்தினரின்வாழ்வியல் முறையை இடையிலுள்ள பகுதி விளக்குகிறது. நாவலின் பிற்பகுதி உறவுகளின் கோப தாபங்கள், இறப்பு, திருமண சடங்குகள் என்பதை எல்லாம் மறந்து, மனித மாண்பு வெளிப்படும் பகுதியாக மாறிப்போகிறது.

வாழ்க்கையைப் படைப்பில் கொண்டுவரும்போது, அதில் நிகழும் கதை, நடமாடும் மனிதர்கள், அவர்கள் புழங்கும் வெளி என இவை அனைத்தும் முக்கியம் என்றாலும், அதில் படர்ந்து வரும் படைப்பாளியின் பார்வையே, அந்த படைப்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களை நோக்கி நகரும் போது, அதனை நம்பியிருந்த சேவைச் சமூகத்தினரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.

அன்றைய சூழலில் ஆக்கிரமித்த சாதிப் பிரச்னை, வர்க்க முரண், உழைப்புச் சுரண்டல் போன்றவற்றின் மீதான பார்வைகளை இந்நாவல் முழுமையாக நிராகரித்திருக்கிறது. காருமாமா வாழ்க்கையில் சந்தித்த வீழ்ச்சியை தான் இந்நாவல் முழுமையாக பேசுகிறது.

தனிமை எவ்வளவு கொடூரமானது என்பதையும் இந்நாவலை வாசிப்பவர்கள் உணர முடியும். தனிமையும் அது ஏற்படுத்தும் மனப்பிறழ்வும் கதை மாந்தரை மூர்க்கம் கொள்ளச் செய்கின்றன.

இந்நாவலின் மனிதர்கள் அவர்களின் அத்தனைத் தவறுக ளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள்.அவர்களின் அத்தனைக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.

வறுமை, அலைக்கழிப்பு தொடர்ந்து விரட்டுகிற வாழ்வில், தங்களுக்கான நிம்மதியை, நிபந்தனையற்ற மன்னிப்பின் வழியாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பின் வழியாகவும் தேடிக் கொள்கிறார்கள். சாகித்ய அகாதமி விருது பெறவில்லை யென்றாலும், இந்த புதினம் கொண்டாடப் பட்டிருக்கும், பரவலாக பேசப்பட்டிருக்கும்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋$

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top