Close
அக்டோபர் 1, 2024 7:34 மணி

சூப்பர் ஸ்டார் ரஜினி நலமாக இருக்கிறார்..! தமிழக அமைச்சர் தகவல்..!

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளது என்று தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (73), ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று அவரது மனைவி லதா விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தகவலில், “ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளது. அவரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ரஜினிகாந்துக்கு பயப்படும் வகையில் எதுவும் இல்லை. அவருக்கு திட்டமிட்ட மருத்துவ பரிசோதனையே செய்யப்படுகிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை.

தமிழக மருத்துவத்துறை அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்து அறிந்து வருகின்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ முறைகளையும் அறிந்துவருகின்றனர்” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என்று ரஜினிகாந்த் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

நடிகர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், “திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அன்பு நண்பர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன் எனவும் அவர் விரைவில் முழு உற்சாகத்தோடும், ஆரோக்கியத்தோடும் தனது அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

“ரஜினிகாந்த் விரைவாக குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.” என ஆளுநர் ரவி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top