Close
நவம்பர் 22, 2024 3:59 காலை

நாமக்கல்லில் வன உயிரின வார விழாயொட்டி விழிப்புணர்வு போட்டி

நாமக்கல்லில் வன உயிரின வார விழாயொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் உறுதுணை குறித்த விழிப்புணர்வை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே ஏற்படுத்தும் வகையில், வன உயிரின வார விழா, ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இந்த ஆண்டு, மாவட்ட வனத்துறை சார்பில், வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலர் கலாநிதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் (பொறுப்பு) விஜயன், மரகதம், ரவிசெல்வம், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, ஓவியம், பேச்சு, கட்டுரை, வினாடி விணா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக ஓவியப் போட்டியில், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த ஓவியங்களை, ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வமுடன் வரைந்து, தங்களது திறனை நிரூபித்தனர். மேலும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், நமது அன்றாட வாழ்வில் காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான வழிகள், தமிழக மரங்களின் முக்கியத்துவம் உள்ளிட்ட பேச்சுப் போட்டிகளிலும் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் வனச்சரகர் பழனிசாமி, வனத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top