Close
அக்டோபர் 6, 2024 12:31 மணி

தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவைகளின் சார்பில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் , தேர்வான இளைஞர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை) மற்றும் மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலையிலும், அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கிடும் வகையில், சிறப்பான நிர்வாகத்தினை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளார்கள். மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெற்று, வாழ்வில் வளம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு முகாம்களை நடத்திட அறிவுறுத்தப்பட்டு, அதனடிப்படையில் இளைஞர்கள் வேலைவாய்ப்பினையும் பெற்று பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கி வரும் மாணாக்கர்களுக்கு தரமான கல்வி மட்டுமன்றி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையிலும், புதிய பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி, அதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில், ரூபாய் 10 இலட்சம் கோடி புதிய முதலீடுகளை ஈர்த்து புதிய தொழில்களை தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிடும் பொருட்டும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கல்வியின் அடிப்படையில் மாதந்திர உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கல்வி அறிவோடு சேர்த்து தொழில் பயிற்சியையும் வழங்கிடும் பொருட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
படித்த அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படுவது என்பது சாத்தியமில்லை. இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்றார்போல் தனியார் துறையிலும் சிறந்த வேலை வாய்ப்பினை பெற்றிடும் வகையில், அரசின் அறிவுரையின்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் இன்றைய தினம் சிறப்பாக சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 85 தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இம்முகாமிற்கு, மாவட்டம் முழுவதுமிருந்து மொத்தம் 1,966 வேலைநாடுநர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து, நேர்முகதேர்வில் கலந்து கொண்டனர். இதில் 09 மாற்றுத்திறனாளிகள் உட்பட 285 வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கி, தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 97 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இம்முகாம்களின் மூலம் வேலை வாய்ப்பினை பெறுகின்றவர்கள், கூடுதலாக தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் வகையில், அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கு பெறுவதற்கும் தங்களை தயார் படுத்திக் கொண்டு, அதன் மூலமும் சிறந்த வேலை வாய்ப்பினைப் பெற்று பயன்பெற வேண்டும். தங்களுக்கான துறையை தேர்ந்தெடுத்து, அதில் சாதித்து காட்ட வேண்டும்.  இது போன்று அரசின் நலத்திட்டங்கள் வாயிலாக பயன்பெற்று வரும் பயனாளிகள் தங்களது வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அதனை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் இராஜேந்திர பிரசாத், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.மணிகணேஷ், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்
குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணாத்தாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top