Close
நவம்பர் 22, 2024 4:13 காலை

ஜாம் நகர் அரச குடும்பத்தின் வாரிசாக அஜய் ஜடேஜா

குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஜாம் சாஹேப் சத்ருஷாலி சிங்ஜி தனது அரச குடும்பத்தின் வாரிசை அறிவித்துள்ளார். அவர் தனது வாரிசாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார். தற்போது ஜாம் நகர் என்றும் அழைக்கப்படும் நவா நகர்  அரச குடும்பத்தின் சாம்சாஹேப் சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய்சிங்ஜி ஜடேஜா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்து வெற்றி பெற்ற நாளை தசரா பண்டிகை குறிக்கிறது என நம்பப்படுகிறது. தசரா நாளான இன்று, அஜய் ஜடேஜா என்னுடைய வாரிசாக இருப்பதற்கு ஏற்றுக் கொண்டு, எனக்கிருந்த இக்கட்டான பிரச்னைக்கு ஒரு தீர்வு வழங்கி உள்ளார். இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஜாம் நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக் கொண்டது ஜாம் நகர் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தற்போது ஜாம் சாகேப் சத்ருசல்யா சிங்ஜிக்கு குழந்தைகள் இல்லை. இந்த காரணத்திற்காக, அவர் தனது வாரிசை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அவர் அஜய் ஜடேஜாவை தேர்வு செய்தார். ஜாம் சாகேப் சத்ருஷாலி சிங்ஜியின் தந்தை திக்விஜய் சிங், ஜாம் சாகேப் பதவியில் 33 ஆண்டுகள் இருந்தார். அவரது மாமா ரஞ்சித் சிங்ஜி அவரை தத்தெடுத்து தனது வாரிசாக ஆக்கினார். இந்திய கிரிக்கெட்டின் உள்நாட்டுப் போட்டியான ரஞ்சிக் கோப்பை ஜாம் சாகேப் ரஞ்சித் சிங்கின் பெயரில் நடத்தப்படுகிறது.

சத்ருசல்யாசிங்ஜி திக்விஜய்சிங்ஜி ஜடேஜா சகோதரர் ( உடன் பிறந்தவர் அல்ல) தவுலத் சிங் ஜடேஜா. இவரின் மகன் தான் அஜய் ஜடேஜா. தவுலத் சிங் ஜடேஜா 3 முறை ஜாம் நகர் எம்.பி., ஆக பதவி வகித்து உள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா, 1992ம் ஆண்டில் இருந்து 2000ம் ஆண்டு வரை இந்தியாவுக்காக 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

2000 ஆம் ஆண்டு மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜடேஜா பிக்சிங் வழக்கில் 5 ஆண்டு தடையை எதிர்கொண்டார். இதையடுத்து பிசிசிஐ ஜடேஜாவுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜடேஜா மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்தது. இதற்குப் பிறகு, ஜடேஜாவும் உள்நாட்டு கிரிக்கெட்டில் மீண்டும் வந்தார், இருப்பினும் அவரால் மீண்டும் டீம் இந்தியாவில் இடம் பெற முடியவில்லை.

ஓய்வு பெற்ற பிறகு, பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், கிரிக்கெட் வர்ணணையாளர் ஆகவும் பணியாற்றி உள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top