Close
நவம்பர் 15, 2024 4:11 காலை

எனது ஈகோவை கரைத்துவிட்ட அப்பா..! ஒரு மகனின் மனசு பேசுகிறது..!

வயலில் உழைக்கும் அப்பா-கோப்பு படம்

அப்பா மாறவேயில்லை. மகன் கண்ணீரோடு எழுதியது.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலைக்காக சென்னைக்கு வந்துவிட்டேன். எனக்கு வேலை கிடைத்த புதிதில் நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம் 8000 ரூபாய்.

அதுவும் அந்த மாதத்தின் 7ம் தேதி தான் போடப்படும். அப்படி முதல் மாதச் சம்பளம் எனது கணக்கில் பேங்கில் வரவு வைக்கப்பட்டதும், எனக்கு தலைகால் புரியவில்லை. உடனே வீட்டிற்குப் போன் செய்தேன். அப்பா தான் எடுத்தார். அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை. மெல்லிய குரலில் குசலம் மட்டும் விசாரித்து விட்டு,

அப்பா “உங்களுக்கு எதாச்சும் வேணுமாப்பா” என்றேன்

அப்பா பதில் சொல்லவில்லை.

‘இதோ அம்மாட்ட பேசு…’ என்றவாறே போனை அம்மாவிடம் தந்து விட்டார்.

நானும் அம்மாவிடம், ‘பாத்தியா நான் என்னமாச்சும் வேணுமான்னு அப்பாட்ட கேக்கேன். பதிலே சொல்லல… இவரெல்லாம்…” என்று துவங்கி அப்பாவை சிறிது வசை பாடிவிட்டு, மற்ற கதைகளை அதாவது அந்தக் கதைகளை எழுபத்தியெட்டு முறை அம்மாவிடமே சொல்லியிருந்தாலும் எழுபத்தி ஒன்பதாவது முறையும் முதல் தடவை கேட்பது போல  கேட்கும் அம்மாவிடம் பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.

ஓரிரு நாட்கள் கழித்து என் வங்கிக் கணக்கை எதேச்சையாகப் பார்த்தேன். அந்த அக்கவுண்ட் என் கல்லூரி காலத்தில் இருந்து நான் பயன்படுத்தும் கணக்காகும். என் அப்பா என் செலவுக்காக என்று அதில் தான் பணம் போடுவார்.

பணியில் சேர்ந்த தகவலும், எனக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவகாரங்களும் அப்பாவுக்கு நான் சொல்லிவிட்டேன். அதனால் இனி மாதச் செலவுக்காக அப்பா அதில் பணம் போட மாட்டார் என்று நினைத்திருந்தேன். அதோடு இனி அப்பா காசு நமக்கெதுக்கு என்ற ஆணவமும் என் தலையில் ஏறிக்கொண்டதால் அந்த வங்கிக் கணக்கை நான் பார்க்கவில்லை.

முதல் மாதச் சம்பளம் வாங்கி அது தீரும் நிலை வந்தவுடன் பழைய அக்கவுன்டில் ஏதாவது பணம் மிச்சம் இருக்கிறதா என்று அக்கவுன்டைப் பார்த்தால், எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

அதில் வழக்கம் போல, அப்பா அந்த மாதமும் 30 ஆம் தேதியே ஐயாயிரம் ரூபாய் போட்டிருந்தார். அதற்கடுத்த மாதங்களிலும் இதுவே தொடர்ந்தது. அது மட்டுமின்றி அந்த வருடமும் வழக்கம் போலவே, தீபாவளிக்கும், பொங்கலுக்கும் என் பிறந்த நாளுக்கும் நான் வீட்டிற்கு வரும் முன்னரே துணிமணிகள் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. எனக்கு யாரோ என்னை ஓங்கி அறைந்தது போல இருந்தது. கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன்.

ஆனால், அப்பா மாறவேயில்லை…

தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தை அன்பின் முன்னே என்பது எவ்ளோ உண்மை என்பது எனக்கு விளங்கியது.

வெளித் தோற்றத்தில் அம்மா பார்க்க அழகாக இருப்பார். வீடும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த வீட்டின் அஸ்திவாரம் அப்பா. அதன் பலம் வெளியே தெரியாது. ஆனால் உறுதியாக இருக்கும்.

நான் போகும் பாதை எல்லாம் என் தந்தை போட்டு வைத்ததுதானே

எனைச் சேரும் செல்வம் எல்லாம் அவர் பார்த்து விதைத்ததுதானே

கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன்.

அப்பா மாறவேயில்லை.

இது போல்தானே எல்லா அப்பாக்களும் இருப்பார்கள். அப்பா ஒரு பலாப்பழம். மேல்புறத்தில் முட்கள் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் இனிமையான சுவைமிகு சுளைகள் இருக்கும். அதுதான் அப்பா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top