Close
நவம்பர் 22, 2024 3:42 காலை

டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு: கலெக்டர் ஆய்வு..!

மணப்பள்ளி கிராமத்தில், டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணியை, நாமக்கல் கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்:

மணப்பள்ளி கிராமத்தில் டிஜிட்டல் முறையில், பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் 6.11.2024 முதல் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் வயலில் சாகுபடி செய்துள்ள பயிர்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணி நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள, 433 வருவாய் கிராமங்களில், 8,80,284 உப சர்வே எண்களில், நாமக்கல் தனியார் வேளாண்மை கல்லூரியை சேர்ந்த 430 மாணவ, மாணவிகள் 7 தாலுகாக்களிலும், பவானி ஆப்பகூடல் தனியார் வேளாண்மை கல்லூரியை சேர்ந்த 51 மாணவ, மாணவியர் குமாரபாளையம் தாலுகா பகுதிகளிலும் பங்கேற்று டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து வேளாண்மைத்துறையின் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து கிராமம் வாரியாக சர்வே எண் மற்றும் உப சர்வே எண் வாரியாக, சாகுபடி செய்துள்ள பயிர்கள், பயிர் சாகுபடி கணக்கீடு மொபைல் அப்ளிகேஷன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, மணப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற டிஜிட்டல் முறை பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணியை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top