திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பார்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு , பேசுகையில்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டு தோறும் நடத்துவது தொடர்பாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கார்த்திகை தீபத்திருவிழா தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த ஆண்டு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். தமிழக முதல்வர் தீபத் திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக சட்டசபையில் பாராட்டி பேசி உள்ளார். அறநிலையத் துறை அமைச்சர், நான் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் திருவிழா தொடர்பாக பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளோம்.
பக்தர்களின் அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். ஆன்மீக பக்தர்களுக்கு உணவு வழங்க வேண்டும். இடர்பாடுகள் ஏதும் இன்றி விழா நடத்தப்பட வேண்டும்.
மேலும் கடந்த ஆண்டு தீபம் ஏற்றி முடிந்த பின்னர் சில இடங்களில் பற்றி எரிந்த விபரீதங்கள் இந்த ஆண்டு நடக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபத் திருவிழாவைக் காண தவறான அனுமதிச் சீட்டுகளுடன் வரும் பக்தர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 10ம் தேதி தேர் திருவிழாவும், 13ம் தேதி தீபத் திருவிழா நடக்கும் . அன்று வரை திருவண்ணாமலையில் தங்கி இருக்கும் பக்தர்கள் மகா தீபத்தை தரிசித்த உடன் தங்கள் ஊருக்கு திரும்புவார்கள். எனவே அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி கூடு தலாக செய்து தரப்படும்.
கார் பார்க்கிங் வசதியும் செய்து தரப்படும். ஆட்டோகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்ப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் அனைவரும் பாராட்டும் வகையில் தீபத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட துணைசெயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.