நாமக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 3,812 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் வகையில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2ம் கட்டத்தினை, ரூ. 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரியலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி, மலையாண்டி தெரு குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா, மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கியும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கியும் பேசியதாவது:-
தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு இணங்க, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரை கண்டுபிடித்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற புதிய திட்டம், நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 2023- 2024 ஆம் ஆண்டு முதல் கட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு நிலையில் உள்ள 1,018 குழந்தைகள், மிதமான ஊட்டச்சத்து குறைபாடு நிலையில் உள்ள 1,281 குழந்தைகள் என மொத்தம் 2,299 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்டத்தில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு நிலையில் உள்ள 1,874 குழந்தைகள், மிதமான ஊட்டச்சத்து குறைபாடு நிலையில் உள்ள 1,938 குழந்தைகள் என மொத்தம் 3,812 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை மேயர் பூபதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.