கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.
அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.
இந்தநிலையில், ஐப்பசி மாத பெளர்ணமி நேற்று 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.19 மணிக்கு துவங்கி இன்று அதிகாலை 3.33 மணிக்கு விரைவடைந்தது.
இந்நிலையில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை இரவே அன்னாபிஷேகம் நிகழ்வு நடைபெற்றதால் அப்போதும் முதலே பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி வரத் தொடங்கினர்.
தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் தொடங்கி இன்று காலை விடிய விடிய பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர். காலை முதலில் தூறல் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
நேற்று மாலை 4 மணிக்கு பிறகு பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
கோவிலில் கடும் நெரிசல்
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோயில் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர் இந்த வழியாக வந்த பக்தர்களின் வரிசை தேரடி வீதியையும் தாண்டி சுமார் அரை கீலோ மீட்டருக்கு பூத நாராயண பெருமாள் கோயில் வரை நீண்டிருந்தது.
மேலும், பக்தர்கள் கூட்டம் காரணமாக நகர முடியாமல் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நிற்கின்றனர். இந்த கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கு முறையான ஏற்பாடு செய்யவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் கோயிலில் கட்டண தரிசனம் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.