Close
நவம்பர் 18, 2024 5:38 காலை

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் பத்திரிக்கையாளர்கள் தின விழா கொண்டாட்டம்

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜி பள்ளியில் நடந்த தேசிய பத்திரிகையாளர் தின விழாவில் பள்ளியில் செயல்படுத்தப்பட்ட செய்திக் கதம்பம் எனும் வகுப்பறை நூலக கையேட்டினை வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள்

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் இன்று மக்களின் கண்ணாடி என்ற பொருளில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் முதல் நிகழ்வாக பள்ளி முதல்வர் பாலமுருகன், பொருளாளர் கலைக்குமார், மேலாளர் தியாகராஜன், பள்ளியின் மாணவர் தலைவர் காவியன், தலைவி தான்யா ஶ்ரீ, பாலிமர் தொலைக்காட்சி நிருபர் சுரேஷ் கண்ணன், தூர்தர்ஷன் நிருபர் சக்தி, வணக்கம் தமிழகம் பத்திரிக்கையாளர் சுப்ரமணியன், தளபதி அரசு பத்திரிக்கையாளர் சுரேஷ் மாலை மலர் பத்திரிக்கையாளர் அருள்நாதன் மற்றும் சிவகங்கை எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர் வெங்கடேஷ்,உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜி பள்ளியில் நடந்த தேசிய பத்திரிகையாளர் தின விழாவை விளக்கேற்றி தொடக்கி வைத்த பள்ளியின் தாளாளர் டாக்டர் பாலகார்த்திகேயன்

இவ்விழாவில் பள்ளி மாணவர்கள் பத்திரிக்கை செய்திகள் திரட்டும் பணியில் இருக்கும் சில முக்கிய நிகழ்வுகளையும் அதனை பத்திரிக்கை பிரதியாக வெளியிடும் அச்சகத்தில் நடைபெறும் பணிகளையும் நாடகப் பாங்கில் வடிவமைத்திருந்தனர்.

பத்திரிக்கையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக பத்திரிக்கை உருவான வரலாறு மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவ்விழாவில் பள்ளியில் செயல்படுத்தப்பட்ட செய்திக் கதம்பம் எனும் வகுப்பறை நூலக கையேட்டினை பத்திரிக்கையாளர்கள் வெளியிட்டனர். இதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் பத்திரிக்கையில் உள்ள பொது அறிவு, விளையாட்டு, தொழில் நுட்பம் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் போன்ற முக்கிய செய்திகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது.

மொழிப்பாட ஆசிரியர்கள் அனைவரும் வகுப்பு வாரியாக தங்களது குழந்தைகளுக்கு பிரதி மாதம் தோறும் வெளியாகும் செய்தித் தாள்களைத் திரட்டி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் அதனை செய்திக் கதம்பமாக பள்ளி நூலகத்தில் பராமரித்து வருகின்றனர்.

மேலும் இவ்விழாவில் பள்ளி மாணவர்கள் பத்திரிக்கையாளர்கள் பற்றிய சிறப்பு கவிதையுடன் பத்திரிக்கையாளர்களுக்கு மக்களின் கண்ணாடி எனும் பட்டத்தை வழங்கினர். இது குறித்து வணக்கம் தமிழகம் பத்திரிக்கையாளர் சுப்ரமணியன் கூறியபோது,

சிவகங்கையில் இயங்கிவரும் இப்பள்ளியில் வருடந்தோறும் பத்திரிக்கையாளர்கள் தினத்தை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு புதிய பெயர்களை சூட்டுவதிலும் மகிழ்கிறோம். பள்ளியில் நடைபெற்று வரும் முக்கிய நிகழ்வான செய்திக் கதம்பம் அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஒரு மணிமகுடமாகவே பார்க்கிறோம் என்றும் கூறினார்.

மேலும் பத்திரிக்கையாளர்கள் மக்களின் கண்ணாடி என்பதை ஏற்ற அவர்கள், மாணவர்களுக்கு சிறப்பு செய்திகளுடன் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர். விழாவில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் பூங்கொத்து மற்றும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

பள்ளியின் தலைவர் டாக்டர். பால.கார்த்திகேயன், கலைத்திட்ட இயக்குனர் கங்கா கார்த்திகேயன் உள்ளிட்ட இயக்குனர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top