மேற்கு வங்கத்தில் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் திரிணமுல் கவுன்சிலரை துப்பாக்கியால் சுட முயன்ற சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மஹாராஷ்டிராவில் பாபா சித்திக் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தைப் போலவே மேற்கு வங்கத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது அரசியல் பிரமுகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோல்கட்டா மாநகராட்சியின் 108வது வார்டு திரிணமுல் கட்சி கவுன்சிலராக இருப்பவர் சுஷந்தா கோஷ். இவர் தனது வீட்டின் முன்பக்கம் அமர்ந்திருந்தபோது ஸ்கூட்டரில் வந்த 2 பேரில் ஒருவன், திடீரென இறங்கி வந்து, துப்பாக்கியால் சுஷாந்தா கோஷை சுட முயன்றான். ஆனால், துப்பாக்கி திடீரென கோளாறு ஆனதால், புல்லட் வெளியே வரவில்லை. இதனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.
பின்னர், அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த இளைஞரை சுஷாந்தா கோஷ் மடக்கி பிடித்து,
தன்னை கொல்ல யார் அனுப்பி வைத்தது என்று கேட்டு அந்த நபரை தொடர்ந்து தாக்கினார். இதையடுத்து, அந்த நபரை போலீஸில் ஒப்படைத்தனர். இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.