Close
நவம்பர் 17, 2024 9:34 மணி

மக்களோடு மட்டுமே கூட்டணி: சொல்கிறார் திருமா

கூட்டணிக்கு வரும்படி மறைமுக அழைப்பு விடுத்த அ.தி.மு.க., நிர்வாகிக்கு பதில் அளித்த திருமாவளவன், ‘மக்களோடு தான் கூட்டணி’ என்று பதில் அளித்துள்ளார்.

வரும் 2026ம் ஆண்டு தேர்தல் களத்தை நோக்கி, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்கிரஸ் என அனைத்து கட்சிகளுமே தயாராகி வருகின்றன. தேர்தல் பணிகளில் கட்சிகள் பிசியாக இருக்கும் அதே வேளையில் கூட்டணி கணக்குகள் மாறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆளும் தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., கூட்டணி இடையே கணக்குகள் மாறும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் விடுதலை சிறுத்தைகள் வரும் தேர்தலில் யாரின் பக்கம் நிற்கும் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்தது.

நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சியுடன் கூட்டணி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என இஷ்டம் போல், ஊரெங்கும் திக்கு தெரியாமல் பேச்சுகள் ஓடியதே அதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்  சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில்  சட்ட அமைச்சர் ரகுபதி, தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அ.தி.மு.க., நிர்வாகி இன்பதுரை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் இன்பதுரை பேசியதாவது; இன்று தமிழகமே திருமாவளவனை பார்த்துக் கொண்டு இருக்கிறது. அவர் எங்கே செல்வார் என்று. அவர் இங்கே தான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்.

நான் அரசியல் பேச வரவில்லை. வழக்கறிஞர்கள் எங்கு இருந்தாலும் திருமா அங்கே வருவார் என்றுதான் சொன்னேன். அவர் நம்மோடுதான் இருக்கிறார். நல்லவர்களுடன் தான் இருப்பார் என்று பேசினார்.

திருமா எங்களுடன் தான் இருக்கிறார், எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார் என்று அ.தி.மு.க., இன்பதுரை கொளுத்தி போட அடுத்தக்கட்ட அரசியல் கணக்கு ஆரம்பானது.

தி.மு.க., அ.தி.மு.க., என முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், திருமாவளவனை அழைத்திருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளானது.

ஆனால் அதே மேடையில் திருமாவளவன் பதிலளித்து  பேசியதாவது; மக்களோடு தான் விடுதலை சிறுத்தைகள் நிற்கும். இதுதான் இன்பதுரைக்கு நான் அளிக்கும் பதில். மக்கள் பிரச்னை என்றால், மக்களுக்காக கட்சி அடையாளங்களை கடந்து விடுதலை சிறுத்தைகள் நிற்கும். தேர்தல் அரசியல் வேறு, மக்கள் அரசியல் என்பது வேறு.

மக்கள் விரோத சட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது, ஒரு எதேச்சதிகாரமான ஆட்சி பீடத்தில் இருக்கிற போது, நாம் மக்களோடு நிற்க வேண்டும். மக்களின் உணர்வுகளுடன் நம்மை கரைத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் எங்களுக்கு உண்டு. தேர்தல் நிலைப்பாடு முற்றிலும் வேறானது.வெற்றியை, நாட்டு நலனை, கட்சியை அடிப்படையாக கொண்டது. முரண்பாடான முடிவை கூட ஒரு கட்சி எடுக்க நேரும் என்று பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top