காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 315 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கும் சிறந்த சுற்றுச்சூழல் களபணிகள் ஆற்றிய மாணவ/மாணவியர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளுடன் இணைந்து செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. வெ. வெற்றிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.