Close
நவம்பர் 21, 2024 10:17 காலை

தமிழர்கள் பயன்படுத்திய மண்பானைகளில் உங்களுக்கு எத்தனை தெரியும்..? தெரிஞ்சுக்கங்க..!

மண் பாணி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

தமிழரின் வாழ்வியலோடு மண் பானை கலந்து இருந்தது. முற்காலத்தில் மண்பானை மட்டுமே எல்லா பயன்பாட்டிலும் இடம்பிடித்து இருந்தது. உலோக கண்டுபிடிப்புகளுக்குப்பின்னரே மண்பானை மெல்ல மெல்ல பயன்பாட்டில் இருந்து காணாமல் போனது.

ஆனாலும் மண்பானை சமையல் ஆரோக்யம் மிக்கது என்பதால் நவநாரீக காலத்திலும் பெரிய ஓட்டல்களில் கூட மண்பானை சமையல் இடம்பிடித்துள்ளது. மீன் குழம்பை மண்பானையில் வைத்தால் அதற்கென்று ஒரு தனி சுவை உண்டு. கம்பஞ்சோறு கிண்டுவது மண்பானையில்தான். அதற்கும் தனி சுவை உண்டு.

தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த அந்த மண் பானைகள் வகை வகையாக இருந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனிப்பெயர் உள்ளது. தமிழர்கள் பயன்பாட்டில் இருந்த மண்பானை வகைகளும் அதன் பயன்களும் இங்கே தரப்பட்டுள்ளன.

1. அஃகப்பானை – (தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை)

2. அஃகுப்பானை – வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.

3. அகட்டுப்பானை – நடுவிடம் பருத்த பானை

4. அடிசிற்பானை – சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.

5. அடுக்குப்பானை – நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.

6. அரசாணிப்பானை – திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.

7. உசும்பியபானை – உயரம் மிகுந்த பானை.

8. உறிப்பானை – உறியில் வைத்தற்கு ஏற்ற பானை

9. எஃகுப்பானை – இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை

10. எழுத்துப்பானை – எழுத்துகள் வரையப் பெற்ற பானை

11. எழுப்புப்பானை – உயரம் வாய்ந்த பானை

12. ஒறுவாயப்பானை – விளிம்பு சிதைந்த பானை

13. ஓதப்பானை – ஈரப் பானை

14. ஓர்மப்பானை – திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை

15. ஓரிப்பானை – தனிப் பானை, ஒல்லியான பானை

16. ஓவியப்பானை – ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை

17. கஞ்சிப்பானை – கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை

18. கட்டப்பானை – அடிப்பகுதி வனையப்படாத பானை

19. கட்டுப்பானை – மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )

20. கதிர்ப்பானை – புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை

21. கரகப்பானை – கரவப்பானை – நீர்க்கரகம்

22. கரிப்பானை – கரி பிடித்த பானை

23. கருப்புப்பானை – முழுவதுமாகக்
கருநிறம் கொண்ட பானை

24. கருப்பு – சிவப்புபானை – உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை

25. கலசப்பானை – கலயம், கலசம், கலம், நீர்க்கலம்

26. கழுநீர்ப்பானை – அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)

27. காடிப்பானை – கழுநீர்ப் பானை

28. காதுப்பானை – விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை

29. குண்டுப்பானை – உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை

30. குறைப் பானை – அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை எனவும் பேர் பெறுகின்றது)

31. கூடைப்பானை – கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை

32. கூர்முனை பானை – அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை

33. கூர்ப் பானை – கூர் முனைப் பானை

34. கூழ்ப்பானை – கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை

35. கோளப் பானை – உருண்டு திரண்ட பானை

36. சருவப் பானை – மேற்புறம் அகண்டும் – கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.

37. சவப்பானை – சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி

38. சவலைப் பானை – நன்கு வேகாத பானை, மெல்லிய பானை

39. சன்னப் பானை – மெல்லிய பானை, கனமில்லாத பானை

40. சாம்பல் பானை – கையால் செய்யப் பெற்ற பானை

41. சொண்டுப் பானை – கனத்த விளிம்புடைய பானை

42. சோற்றுப்பானை – சோறாக்குவதற்குப் பயன்படும் பானை

43. சில்லுப் பானை – மிகச் சிறிய பானை

44. சின்ன பானை – சிறிய பானை

45.தவலைப்பானை – சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)

46. திடமப் பானை – பெரிய பானை (திடுமுப் பானை)

47. திம்மப் பானை – பெரும்பானை (திம்மம் – பருமம்)

48. துந்திப் பானை – தொந்தி போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை

49. தொண்ணைப் பானை – குழிவார்ந்த பானை

50. தோரணப் பானை – கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை

51. தோள்பானை – தோளில் (சுவர் பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை

52. நாற்கால் பானை – நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை

53. பச்சைப் பானை – சுடப்பெறாத பானை

54. படரப்பானை – அகற்ற – பெரிய பானை

55. பிணப் பானை – சவப்பானை, ஈமத்தாழி

56. பொள்ளற் பானை – துளையுள்ள பானை (பொள்ளல் பானை)

57. பொங்கல் பானை – பொங்கல் விழாவிற்குரிய பானை

58. மங்கலக்கூலப்பானை – திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை

59. மடைக்கலப் பானை – திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை

60. மிண்டப் பானை – பெரிய பானை

61. மிறைப் பானை – வளைந்து உயர்ந்த பானை

62. முகந்தெழு பானை – ஏற்றம் இறைக்கப் பயன்படும் பானை

63. முடலைப் பானை – உருண்டையுருவப் பானை

64. முரகுப்பானை – பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)

கடம் – இசைக்கருவி

65. மொங்கம் பானை – பெரும் பானை (மொங்கான் பானை)

66. மொட்டைப் பானை – கழுத்தில்லாத பானை

67. வடிநீர்ப்பானை – நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்

68. வழைப் பானை – வழவழப்பான புதுப்பானை

69. வெள்ளாவிப்பானை – துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை.

கடம் என்று சொல்லக்கூடிய இசைக்கருவி மண்ணில் செய்யப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top