Close
நவம்பர் 21, 2024 10:09 காலை

சாலை பணிகளில் குறைபாடு இருந்தால் பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

நெடுஞ்சாலைப் பணிகளில் குறைபாடுகள் இருந்தால் பொறியாளர்கள் ஒப்பந்தக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சாலைப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நெடுஞ்சாலை துறை மூலம் சுமார் ரூபாய் 16.202 கோடி மதிப்பீட்டில் , தமிழ்நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பணிகளின் போது ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்

சாலைகளின் இரண்டு புறமும் வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். சாலைப் பணிகளில் குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி பொறியாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிலஎடுப்பு பணிகளில் காலதாமதம் ஏற்படும்போது, கண்காணிப்புப் பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்களின் கவனத்திற்கும் கொண்டுச் செல்ல வேண்டும். 2021-2022ம் ஆண்டில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சில சாலைப் பணிகள் இதுவரை முடிக்கப்படாத பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒப்பந்தக்காரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைவாக முடிக்காமல் சாலைகள் தரமாக இல்லை என்றாலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தார் சாலைகள் அமைக்கப்படும் போது அதன் கனம் சரியான அளவில் இருக்கிறதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சில சாலை பணிகளில் இன்னும் 40 சதவீதம் வரை முடிக்கப்படாமல் உள்ளது.  இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

டிசம்பர் 2024க்குள் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு, திட்டங்கள் அலகு, தேசிய நெடுஞ்சாலை அலகு, நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு, பெருநகர அலகு, சென்னை கன்னியாகுமரி தொழிற் தர திட்ட அலகு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு ஆகிய அனைத்து அலகுகளின் நிலுவைப் பணிகள் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறுது துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ் , தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் திட்ட இயக்குனர் ராமன், நெடுஞ்சாலை துறையின் முதன்மை இயக்குனர்கள், தலைமை பொறியாளர்கள், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர்கள், மெட்ரோ திட்ட தலைமை பொறியாளர்கள், செயலாளர்கள் சிறப்பு தொழில்நுட்ப அதிகாரிகள், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் கோட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top