Close
மே 21, 2025 3:56 காலை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி: அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்

பனை விதைகள் நடும் பணியினை துவக்கி வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் காட்டாம்பூண்டி ஊராட்சியில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு .பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன்,  திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் சார்பாக நீர்நிலைகள் மற்றும் கிராமப்புறங்களில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தொடங்கி வைத்து பேசியதாவது,

பனைமரம் தமிழர்களின் அடையாளம். பனையின் வேர் முதல் நுனி வரை பயன் தருகிறது. ஒரு பனைமரம் ஆனது 2000 லிட்டர் கொள்ளளவு நீரை சேமிக்கும் தன்மை வாய்ந்தது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உதவியாக இருக்கும்.

புயல் காற்றை தாங்க கூடிய மரம். எந்த கால நிலையிலும் வளரக்கூடியது. சர்க்கரைக்கு மாற்றுப் பொருளாக பயன்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லம் பனங்கற்கண்டு பயன்படுத்தி வருகிறார்கள்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரத்தை பெருமளவில் உருவாக்கிடும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் கிராமப்புறங்களில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணி துவக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இளங்கோ, உதவி திட்ட அலுவலர்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்கள், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top