திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்தில் உலக சாதனை நிகழ்வாக 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த பண்ணை குட்டை 60 அடி அகலமும் 30 அடி நீளமும் 4 1/2 அடி ஆழமும் கொண்டது. இந்த பண்ணை குட்டைகள் 21 நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்யும் காலங்களில் நீர் ஆதாரம் வீணாகாமல் இருக்கவும், மழையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மாவட்டமாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டங்களை பெருக்கி நீர் ஆதாரத்தை உருவாக்கும் விதமாக சுமார் 1200 இடங்களில் பண்ணை குட்டைகள் அமைக்கும் உலக சாதனை நிகழ்ச்சி தற்போது நடைபெறுகிறது என அமைச்சர் வேலு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் அமைச்சருடன் மண்ணைத் தோண்டி எடுத்தனர்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ,ஒன்றிய குழு தலைவர்கள் , தன்னார்வலர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆளியூரில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஆவணியாபுரம், கங்காபுரம், இஞ்சி மேடு, கோட்டுப்பாக்கம், சாந்தமங்கலம், நம்பேடு, நெடுங்குணம், குப்பம் வல்லம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பண்ணை குட்டை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.