Close
நவம்பர் 26, 2024 5:35 மணி

தமிழகத்தில் மகப்பேறு டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : டாக்டர்கள் சங்க தலைவர் பேச்சு..!

நாமக்கல்லில் நடைபெற்ற மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் சங்க கூட்டத்தில், அதன் மாவட்ட தலைவர் டாக்டர் சந்திரா பேசினார்

நாமக்கல்:
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தால், தமிழகத்தில் மகப்பேறு டாக்டர்களின் எண்ணிக்கை குறைந்து, பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக, டாக்டர்கள் சங்க தலைவர் கூறினார்.

நாமக்கல் மாவட்ட மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சங்க செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் குழந்தைவேலு முன்னிலை வகித்தார்.

மாவட்ட மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் சந்திராபொன்னுசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
டாக்டர் தொழில் என்பது மனித குலத்திற்கு மிகவும் மகத்தான சேவை செய்யும் தொழிலாகும். குறிப்பாக மகப்பேறு மருத்துவர்கள் ஒரு சிசுவை உலகிற்கு கொண்டுவருவதற்காக தாயையும், கருவையும் சுமார் 10 மாதங்கள் தீவிரமாக கண்காணித்து, பிரசவம் முடியும் வரையில், தங்கள் சொந்த வேலைகளையும் மறந்து கர்ப்பிணி தாய்க்கு சிகிச்சை அளிப்பதே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். ஒரு கர்ப்பிணி பிரசவிப்பது என்பதே மறு பிறவி என சொல்வார்கள்.

அவ்வளவு சிரமமான பணியை மேற்கொள்ளும் மகப்பேறு டாக்டர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக, சமூகத்தில் அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களால் பல்வேறு அழுத்தங்கள் ஏற்படுகிறது.

ஒரு கர்ப்பிணியை சுகமாக பிரசவிக்க வேண்டும் என்பதை முழுமையான கவனத்துடன் டாக்டர்கள் மேற்கொண்டு வரும் வேலையில், ஒரு சில நேரங்கில் தாயின் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் அதிக ரத்தப்போக்கு, ரத்த அழுத்தும் உள்ளிட்டவற்றால் குழந்தைக்கோ, தாய்க்கோ பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு சில நேரங்களில் அனைத்தையும் மீறி மரணம் ஏற்பட்டு விடுகிறது.
இதுபோன்ற நேரங்களில் மகப்பேறு டாக்டர்களின் மீது வன்மம் கொண்டு பல தாக்குதல்கள் நடைபெறுகிறது. குறிப்பாக தாயின் உறவினர்கள் தரப்பில் இருந்தும், அரசு தரப்பில் இருந்தும், அதிகாரிகள் தரப்பில் இருந்தும் உண்மை நிலையை அறியாமல் பல்வேறு அழுத்தங்கள் தரப்படுகிறது. இதனால் பல டாக்டர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மகப்பேறு மருத்துவத்தை கைவிடும் நிலையும் ஏற்படுகிறது.

இதனால் புதிதாக எம்பிபிஎஸ் முடித்து, முதுநிலை மருத்துவம் படிக்கும் டாக்டர்கள் பலரும் மகப்பேறு மருத்துவத்தை தேர்வு செய்யாமல் வேறு பிரிவுகளுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் தற்போது புதிய மகப்பேறு டாக்டர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, மருத்துவ உலகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய மாநில அரசுகள் மகப்பேறு டாக்டர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஆஸ்பத்திரிகளை தரம் பிரிப்பதை கைவிட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், சீனியார் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு குழுவை அமைத்து, மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால் அது குறித்து முழுமையாக விசாரணை செய்த பிறகே, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

அனைவரும் மகப்பேறு மருத்துவத்துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மகப்பேறு டாக்டர்கள் அழகம்மாள், மல்லிகா, சசிகலாதேவி, திருமொழி, கவிதா, சீதா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top