பெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணை, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதோடு, அதிகன மழை பொழிவின் காரணமாகவும் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம், திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், பொதுமக்களின் உடமைகள், நெல், கரும்பு, வாழை, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் சேதமடைந்து பெரும் இழப்புகளை சந்திக்க நேரிட்டது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வகையில் மத்திய குழுவை நியமத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நியமிக்கப்பட்ட மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது விக்கிரவாண்டி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடக் கட்டிடத்தையும், அதில் வைக்கப்பட்டு சேதமடைந்திருந்த விளைப் பொருட்களையும் மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து அய்யூர் அகரம் அருகே உள்ள வெள்ளத்தால் சேதமடைந்த பம்பை ஆற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய குழுவினர், விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற அனைத்து துறை அரசு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு வெள்ள சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 இடங்களுக்கு நேரில் சென்று மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.