நாமக்கல் :
மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின்மூலம், அரசு ஆஸ்பத்திரிகளில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிஓஐடியு தொழிற்சங்கத்துடன் இணைந்துள்ள, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாவட்ட மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. 108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கோவை மண்டல செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் செயலாளர் ராஜேந்திரன் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
இம் மாநாட்டில்108 ஆம்புலன்ஸ் சேவை சட்டத்தில் பணிபுரியும், தொழிலாளர்கள் சக மனிதனாக சமுதாயத்தில் வாழ்வதற்கான உரிமைகளை அரசு வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் சட்ட விரோத செயல்பாடுகளையும், அதற்கு துணைபோகும் அரசு அதிகாரிகளின் செயலையும் மக்களிடம் எடுத்துச்சொல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனியார் மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் வரும் பெரும் தொகையை, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பயன்படுத்த, பொதுமக்கள் நெருக்கடிக்கு ஆளாவதை கைவிட்டு, அரசு ஆஸ்பத்திரிகளில் உரிய வகையில், உயர்தர சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட மாநாட்டில் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் விஸ்வராஜ், விவசாய முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் பத்மராஜ், அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் முருகேசன், உழைப்பாளர் கலைக்கூடம் மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் பகவத்சிங்,
மாணவர் இளைஞர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன், கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரேசன், 108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் சாமிவேல். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.