அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டம் இன்று கூடி நடந்து வருகிறது. அவையில் எழுப்பப்படும் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் குறித்து அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
செல்லூர் ராஜூ கேட்ட கேள்வி:
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் வீர வசந்தராயர் கோயில் புனரமைப்பு பணிகள் எப்போது நடக்கும்?
அவரது கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பதில்:
வீர வசந்தராயர் கோயிலில் 2018ம் ஆண்டில் ஏற்பட்ட தீவிபத்திற்கு பின்னர் அப்போதைய அரசால் நியமிக்கப்பட்ட குழு, 3 ஆண்டுகளில் சிறுசிறு பணிகளை மேற்கொண்டது. வீர வசந்தராயர் கோயிலுக்கு 25 அடி நீளம் கொண்ட கல் தூண்கள் தேவைப்படுகிறது.
இந்தப்பணிகளை மேற்கொள்ள ஒரே அளவான கற்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஏற்கனவே, கோயில் பணிகளுக்காக ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டுள்ளது. வெகுவிரைவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
அதேபோல மீனாட்சியம்மன் கோயில் பணிகளை பொறுத்தவரை 63 பணிகளில் 40 பணிகள் உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதி இருக்கும் 23 பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிச்சயமாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று எங்களின் பக்தனான செல்லூர் ராஜூக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிரித்தபடியே கூறினார்.