மற்ற மாதங்களில் எத்தனை விதமான பொருட்களைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் சங்காபிஷேகமே மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது.
சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் மிகவும் உயர்வான அபிஷேகமாக கருதப்படுவது சங்காபிஷேகம். சங்கினால் நாம் அபிஷேகம் செய்வது மட்டுமல்ல, அந்த சங்காபிஷேகத்தை வேறு யாராவது செய்வதை நாம் தரிசித்தாலும் கூட அளவில்லாத பல பலன்களை பெற முடியும்.
அதிலும் சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி தந்த தீபங்களின் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் சிவனை வழிபடுவது அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி விடும்.
தனக்கு ஏற்பட்ட சாபத்தால் 64 கலைகளில் ஒவ்வொன்றாக இழந்து, அழகு, பொலிவு தேய்ந்து கடும் துன்பப்பட்ட சந்திரன், தன்னுடைய சாபம் நீங்குவதற்காக சிவ பெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து சிவ பூஜை செய்தான்.
சந்திரனின் தவம் மற்றும் பூஜையால் மனம் மகிழ்ந்த ஈசன், சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்ததுடன், பிறை சந்திரனை தனது தலையில் சூடி, சந்திரசேகரனாகவும், சந்திரமெளலீஸ்வரராகவும் காட்சி அளித்தார்.
இதனால் கார்த்திகை சோமவாரத்தில் சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் மனோபலம், மனத்தெளிவு கிடைக்கும். சந்திர பலம் கிடைக்கும். சந்திரன் வழிபட்டு பயன்பெற்றதை போற்றும் விதமாக கார்த்திகை சோமவாரத்தில் சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.
ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ. அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில் தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில்
அதன்படி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. 108 சங்குகளில் வாசனை திரவியங்கள் நிரப்பி மந்திர ஜபம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி அந்த புனித நீரைக் கொண்டு மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு கேள்விகளும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு ஆசிரமத்தின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் நடைபெற்றது.