ஒரு இரவை சிறையில் கழித்த நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை 7 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார். அல்லு அர்ஜுனை வரவேற்பதற்காக அவரது தந்தை மற்றும் மாமனார் ஐதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறைக்கு சென்றுள்ளனர்.
புஷ்பா-2 படத்தின் பிரீமியரின் போது பெண் ஒருவர் இறந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 4 வார கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இருப்பினும், வெள்ளிக்கிழமை இரவு தாமதமாக நீதிமன்ற உத்தரவு நகலை சிறை அதிகாரிகளால் பெற முடியாததால், ஜாமீன் கிடைத்த பிறகும், அல்லு அர்ஜுன் இரவை சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. இன்று டிசம்பர் 14ஆம் தேதி அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து வெளியே வந்தார். நடிகர் அல்லு அர்ஜுன் விடுதலையை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜாமீன் கிடைத்தும் நடிகரை இரவில் வெளியே வர அனுமதிக்காதது குறித்து அவரது வழக்கறிஞர் அசோக் ரெட்டி அதிருப்தி தெரிவித்தார். இந்த உத்தரவின் நகலை உயர் நீதிமன்றத்திடம் இருந்து பெற்றதாகவும், இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்களை (அல்லு அர்ஜுன்) விடுவிக்கவில்லை. அவர்கள் பதில் சொல்ல வேண்டும். இது சட்ட விரோத தடுப்பு, சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் வழக்கறிஞர் கூறினார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாரத ராஷ்டிர சமிதி செயல் தலைவர் கே.டி.ஆர் மற்றும் பலர் நடிகர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா, வருண் தவான் என பல திரையுலக பிரபலங்களும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.