Close
டிசம்பர் 18, 2024 8:25 மணி

உழவர் மாநாடு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த பாமக தலைவர்

மாநாட்டு பணிகளை ஆய்வு செய்த அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடுக்கான முன்னேற்பாடு பணிகளை  பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.  தொடர்ந்து மாநாட்டு திடல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்;

தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே மாநாடுகளை நடத்தி வருகிறோம். உழவா் பேரியக்க மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து விவசாய சங்கங்களும் பங்கேற்க வேண்டும். இந்த மாநாடு மூலம் ஒரு திருப்புமுனை ஏற்படும்.

தங்கள் கட்சியில் 80 சதவீதம் பேர் உழவர்கள் உள்ளனர். உழவர்களை நாங்கள் எப்பொழுதும் கடவுளாகவே பார்த்து வருகிறோம். உழவர்கள் முன்னேற்றத்திற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.3,500 கொடுக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும். புயலால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் இன்னும் போய் சேரவில்லை. எல்லோரும் கஷ்டத்தில் உள்ளனா்.

சாத்தனூா் அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி அதிகளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமாக தரும் அரசு, வட மாவட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்குவது பாரபட்சமான செயலாகும்.

 தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் அரசு என்பது, விவசாயிகளுக்கு எதிரான அரசு. பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. விவசாயம் என்றால் முதல்வர், துணை முதல்வருக்கு தெரியாது. விவசாயத்துக்கு வெற்று அறிவிப்பு வெளியிடுகின்றனர். மத்திய அரசு தொடக்கத்தில் 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கியது. இப்போது 6 கோடி விவசாயிகளாக குறைத்துவிட்டனர். தமிழகத்திலும் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

டங்ஸ்டன் சுரங்கம் தொடங்க, 5,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. திமுக அரசு 10 மாதமாக அமைதியாக இருந்துவிட்டு, மக்கள் போராட்டம் மற்றும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியதால், நாங்கள் எதிர்க்கிறோம் என முதல்வர் கூறுகிறார். டங்ஸ்டன் தொடங்க பாமக அனுமதிக்காது. மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

நிகழாண்டில் 18 நாள்கள் மட்டுமே சட்டப்பேரவை நடைபெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் . விவாதம் இல்லாமல், 16 மசோதாக்களை நிறைவேற்றி உள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை பாமக ஆதரிக்குமா? என சட்டப்பேரவையில் முதல்வர் கேட்கின்றார். அதானி விவகாரத்தில் எந்த வகையான விசாரணையும் ஆதரிக்கிறோம் என முன்பே கூறிவிட்டோம். தமிழ்நாடு மின்சார வாரியம் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் தயாரா என்ற கேள்விக்கு பதில் இல்லை. தவறு இருப்பதால் அமைதியாக உள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள், பாலங்கள் அனைத்தும் உறுதி தன்மை இல்லாமல் இருக்கு என்ற அதமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு நாங்களும் ஆதரவு கொடுக்கிறோம். லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் தரம் இல்லாமல் பாலம், கட்டிடம் கட்டுகின்றனர். 3 மாதத்தில் பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டது. பிஹார் போன்று பாலம் அடித்து செல்லப்படுகிறது என்றார்.

இந்நிகழ்வின் போது பாமகவின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி, தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநிலத் தலைவா் ஆலயமணி, மாநிலச் செயலா் வேலுச்சாமி, பாமக மாவட்டச் செயலா்கள் ஏந்தல் பக்தவச்சலம், கணேஷ்குமாா், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் நாராயணசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் காளிதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு அவருக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதங்கள் வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top