Close
டிசம்பர் 23, 2024 12:26 மணி

அரசுப்பள்ளிக்கு சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்த தலைமை ஆசிரியர்: குவியும் பாராட்டுகள்..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் திரிபுரசுந்தரி.

இவருக்கு தமிழக அரசால் கடந்த ஆண்டிற்கான சிறந்த தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது. இதற்காக தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரிக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

இதில் ஒருபகுதியை செலவு செய்து தனது பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து கொடுத்தார். சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு மையத்தின் திறப்புவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். விழாவில் அவர் பேசுகையில், மாணவர்களுக்கு கல்வி முக்கியம், அதைவிட ஒழுக்கம் மிக மிக முக்கியம்.

மாணவர்களிடம் ஒழுக்கம் இருந்தால் கல்வி தானாக வந்துசேரும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தனக்கு பரிசாக கிடைத்த பணத்தில் மாணவர்களுக்கு புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து கொடுத்த தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரிக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top