Close
ஏப்ரல் 4, 2025 10:37 மணி

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளியை மூட விவசாயிகள் எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு

மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக விவசாயிகள் முன்னேற்ற கழகத்தினர் வந்திருந்தனர்.

மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செயல்படும் மெட்ரிக் பள்ளியை மூடுவதற்கு விவசாய முன்னேற்ற கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் ஆட்சியரிடம்  மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மெட்ரிக்குலேசன் பள்ளி சுமார் 48 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது நாமக்கல் மாவட்ட அளவில் முதல் இங்கிலீஷ் மீடியம் மெட்ரிக்குலேசன் பள்ளியாக விளங்கி வருகிறது.

தற்போது பள்ளியில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 25 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியை மூடும்படி தமிழக அரசு உத்திரவிட்டுள்ளதாக ஆலையின் மேலாண்மை இயக்குனர் கூறியுள்ளார்.

இதனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியை திடீரென மூடினால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் கல்வி கேள்விக்குறியாகும். மிகக் குறைந்த கட்டணத்தில் செயல்படும் இப்பள்ளியில் ஏராளமானோர் பயின்று உயர்ந்த பதவியை அடைந்துள்ளனர்.

எனவே சர்க்கரை ஆலை பள்ளியை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும். அதுவும் இயலவில்லையெனில் விவசாயிகளே நடத்திக் கொள்வதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசின் நவோதயா பள்ளியாக மாற்றி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சர்க்கரைத் துறை அமைச்சர், துறை கமிஷனர் ஆகியோருக்கு எங்களின் கோரிக்கையை பரிந்துரை செய்ய ஆட்சியரிடம்  கோரிக்கை விடுத்துள்ளோம் என கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top