டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ள மத்திய அரசு, சுரங்கம் அமையும் பகுதிகளை மறு ஆய்வு செய்ய இந்திய புவியியல் சர்வேக்கு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர், தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி ஆகிய பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான, புவியியல் குறிப்பாணையை கடந்த 2021 செப்., 14ல் தமிழக அரசிடம், இந்திய புவியியல் சர்வே (ஜிஎஸ்ஐ) அமைப்பு வழங்கியது. அந்த நேரத்தில், டங்ஸ்டன் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் ஏலத்தில் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடம் தான் இருந்தது.
பிறகு, மத்திய அரசு கொண்டு வந்த சட்டதிருத்தத்தின்படி சுரங்க குத்தகைகள் மற்றும் ஏலத்திற்கு விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது. இதில், டங்ஸ்டனும் அடங்கும். இதன் அடிப்படையில், மத்திய சுரங்கத்துறை அமைச்சகம், கடந்த 2023 செப்., 15ல், தமிழகத்தில் உள்ள முக்கியமான தனிமங்கள் ஏலம் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. இதற்கு 2023 அக்.,3ல் பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர், மத்திய அரசின் சட்டத்திருத்தம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, முக்கியமான தனிமங்கள் ஏலத்தில் விடுவதற்கான உரிமை தமிழக அரசிடமே இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், 2021-2023 காலகட்டத்தில் முக்கியமான தனிமங்களை ஏலத்தில் விடும் அதிகாரம் இருந்தும் தமிழக அரசு எதையும் செய்யவில்லை.
ஏலம் விடுவதற்கான அதிகாரம் இருந்தபோதிலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒரு சுரங்கத்தைக் கூட தமிழக அரசு ஏலம் விடவில்லை.இதன் பிறகு, சட்டத்தின்படி, சுரங்கத்தை ஏலம் விடும் நடவடிக்கை துவங்கும் என கடிதம் எழுதிய பிறகு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் உள்ளிட்ட 3 முக்கிய தனிமங்கள் குறித்த விவரங்களை அளிக்கும்படி தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டது.
தமிழக புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர், கடந்த பிப்.,8 ல் அளித்த கடிதம் மூலம் நாயக்கர்பட்டி பிளாக் உள்ளிட்ட 3 பிளாக்குகளின் விவரத்தை அளித்தார். அப்போது, பல்லுயிர் பகுதிகள் குறித்து தெரிவித்திருந்தாலும், அங்கு ஏலம் விடுவதற்கு எதிராக எந்த பரிந்துரையையும் அளிக்கவில்லை.
சுரங்கத்துறை அமைச்சகம், முக்கிய தனிமங்கள் கொண்ட 24 பிளாக்குகளை வெற்றிகரமாக ஏலம் விடுத்துள்ளது. 20.16 சதுர கி.மீ., நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் பிப்., மாதம் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. மீண்டும் இரண்டாவது முயற்சியாக ஜூன் மாதம் ஏலத்தில் விடப்பட்டது. இதனையடுத்து கடந்த நவ., மாதம் ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.
முதலில் ஏலம் விடப்பட்ட காலகட்டத்தில் ஏலம் தொடர்பாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் நடத்திய பல கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொண்டது. ஆனால், ஏலம் தொடர்பாக தமிழக அரசு எந்த எதிர்ப்பையோ, அல்லது எந்த தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை.
தனிமங்கள் உள்ள சுரங்கங்கள் குத்தகைக்கு விடப்படுவதற்கு முன்னர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். அப்போது, பல்லுயிர் பகுதிகள் நீக்கப்படும். இதற்கான உரிமை தமிழக அரசிடம் உள்ளது.
நாட்டின் பொருளாதார நலன் கருதி, ஏலத்தில் விடுவதுடன் மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் பணி நின்று விடும். இதன் பிறகு, லெட்டர் ஆஃப் இன்டென்ட் வழங்குவது, லைசென்சில் கையெழுத்து போடுவது மற்றும் குத்தகைக்கு விடுவதில் மாநில அரசிடம் தான் அதிகாரம் உள்ளது.
தேவைப்பட்டால் சுரங்கம் அமையும் பகுதிகளை மாற்றிக் கொள்ளலாம். இங்கு உற்பத்தி துவங்கியதும் வருமானம் மாநில அரசுக்கே சென்றடையும்.
ஆனால், ஏலம் விடப்பட்ட பிறகு, சுரங்கம் அமையும் பகுதியில் பல்லுயிர் தளம் உள்ளது எனக்கூறி, ஏலத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சுரங்கம் அமையும் பகுதியில் உள்ள பல்லயிர் தளம் உள்ள பகுதிகள் எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து ஆய்வு செய்வது, பல்லுயிர் தளம் இல்லாத பகுதிகளில் சுரங்கம் அமையும் பிளாக்குகள் குறித்தும் ஆய்வு செய்ய ஜிஎஸ்ஐ. யிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு நாயக்கர்பட்டி டங்ஸ்டின் பிளாக்கை ஏலத்தில் எடுத்த நிறுவனத்திற்கு லெட்டர் ஆஃப் இன்டென்ட் வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளது.