Close
டிசம்பர் 28, 2024 2:10 மணி

மொபைல் ஆம்புலன்ஸ் தொடங்கி வைத்த அமைச்சர்கள்

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் புதிய மொபைல் ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா ஆகியன நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில தடகளம் சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, தரணி வேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி ,ஜோதி ,அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ரூபாய் 1.60 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவர் சேவைக்காக 25 இரு சக்கர அவசரக்கால மருத்துவ வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்தும், ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினர் நலவாழ்வை மேம்படுத்தும் வகையில் மலைவாழ் பகுதிகளில் செயல்பாட்டில் உள்ள 20 நடமாடும் மருத்துவ வாகனங்களுக்கு ரத்த பரிசோதனைகளுக்கான பகுப்பாய்வு கருவிகள், தொடர்ந்து  அத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், கொம்மனந்தல் கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதாரஅலகு நிலைய கட்டடம், சிறுகட்டூா் கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் என 9 கட்டடங்களை திறந்து வைத்தனா்.

அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் 2,200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இதில் 1500-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் அரசு அலுவலா்களின் சேவை கிடைக்காத நிலையில், 350-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்றுள்ளேன்.

இதில், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 262 மலைக் கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் 146 மருத்துவா் காலிப் பணியிடங்கள் இருந்தன. தமிழக முதல்வா்

வழிகாட்டுதலின்படி 1,021 மருத்துவா்கள் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டு பணியமா்த்தப்பட்டனா். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 95 மருத்துவா்கள் பணியில் சோ்ந்துள்ளனா். ஜமுனாமரத்தூரில் 15 காலியிடங்களில் 14 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பபட்டன.

நம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவைச் சிகிச்சைக்கு அரங்கு அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் 2 கோடிப் போ் பயனடைந்துள்ளதால் ஐ.நா. சபையின் உயரிய விருது மருத்துவத் துறைக்கு கிடைத்தது.

2023-ஆம் ஆண்டு இதய நோயாளிகளுக்கு லோடிங் டோஸ் மாத்திரை வழங்க 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 10, 999 மருத்துவமனைகளில் 3 வகையான மாத்திரைகள் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

இங்கு பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வைக்கின்றனர். எல்லோருமே சுற்றுச்சுவர் வேண்டும் புற நோயாளிகள் பிரிவுக்கு கட்டிடம் வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். நிதி ஆதாரத்தில் எந்த அளவு கஷ்டத்தில் தமிழ்நாடு அரசு உள்ள போதிலும் மக்கள் நல திட்டங்களை வேறு எந்த முதல்வராக இருந்தாலும் நிதி இல்லை என கையை விரித்து இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு நமது முதல்வர் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்தில் முன்மாதிரியான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களுக்கான நிதியிலிருந்து உங்கள் தொகுதியில் கட்டிடங்களை சீரமைப்பதற்கு வருசத்துக்கு ஒரு கோடியாவது இந்த துறைக்கு தாருங்கள். இது உயிர் காக்கும் துறை மற்ற துறைக்கு கொடுக்கிறீர்கள் நன்றாக செய்கிறீர்கள், ஆளுக்கு ஒரு கோடி கொடுங்கள் எந்தெந்த கட்டிடங்களை சீரமைத்து தர சொல்கிறீர்களோ அதற்கு ஆட்சியர் இரண்டே இரண்டு நாளில் திட்டங்களை தயாரித்து ஒரு வாரத்தில் டெண்டர் விட்டு இரண்டு மாதத்தில் பணிகளை நிறைவேற்றி விடலாம் என கூறினார்

அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

தமிழகத்தில் அரசு சாா்பில், மலைவாழ் மக்களின் நலனுக்காக 2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வனத் துறை அனுமதியுடன் 77 கி.மீ. தொலைவு மலைப் பாதைகள் அமைக்க சட்டப்பேரவையில் அறிவித்ததுடன், ரூ.70 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மலைப் பாதையில் 371 சிறு பாலங்கள், 25 சிறிய மற்றும் பெரிய பாலங்கள் கட்டுவதற்கும், 26 கொண்டை ஊசி வளைவுகளை மேம்படுத்தவும், மண்ணின் உறுதித் தன்மையை தக்க வைப்பதற்காக 45 இடங்களில் தடுப்புச் சுவா் அமைக்கவும், மேலும் 24 இடங்களில் தடுப்புச் சுவா், 22 இடங்களில் வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரூ.205 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் மருத்துவத்துறை இயக்குனர் செல்வநாயகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top