Close
ஜனவரி 8, 2025 3:21 காலை

வழக்கமான நடைமுறையின்படியே பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது.  செயற்குழுக் கூட்டத்துக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்  சிவானந்தம் வரவேற்றார்.மாவட்டப் பொருளாளர் எழுத்தாளர் சோலச்சி அறிமுகவுரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் பாலச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.

மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நூற்றாண்டு விழாக்கள்.

பொதுவுடைமை இயக்க நூற்றாண்டு விழாவை திருச்சியிலும், தோழர் ஆர். நல்லகண்ணு நூற்றாண்டு விழாவை கோவில்பட்டியிலும், குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவை திருப்பூரிலும், எழுத்தாளர் திகசியின் நூற்றாண்டு விழாவை நெல்லையிலும், எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் நூற்றாண்டு விழாவை திருவாரூரிலும், சிந்துவெளி நூற்றாண்டு விழாவை மதுரையிலும் மாநில மையம் சார்பில் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

தெலுங்கில் பிரபலமான எழுத்தாளர் சாரதா நடராஜனின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் பிறந்த புதுக்கோட்டை மாநகரில் ஒரு தெரு அல்லது அரசுப் பள்ளி அல்லது நூலகத்துக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

பல்கலைக்கழகங்களின் நிர்வாக அச்சாக இருக்கும் துணைவேந்தர்கள் இல்லாமல் பல்கலைக்கழகம் செயல்படுவது உயர்கல்வி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி, பல்கலைக்கழகப் பிரதிநிதி, மாநில அரசுப் பிரதிநிதி மற்றும் ஆளுநர் பிரதிநிதி என்ற 3 உறுப்பினர்களைக் கொண்டே தேடுதல் குழுக்களை அமைக்க வேண்டும். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் பிரதிநிதி தேவையில்லை. இந்த நடைமுறையின்படியே தேடுதல் குழுக்களை அமைத்து, துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வேண்டும்.

பல்லுயிர் மற்றும் பண்பாட்டு வள ஆதாரங்களைக் கொண்ட மதுரை அரிட்டாபட்டியில் எவ்விதமான கனிம சுரங்க ஆய்வுகளையும் மேற்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கக் கூடாது. அந்தத்  திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் லெட்சுமி நாராயணா, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலர் த. அறம், மாநிலப் பொருளாளர் ப.பா. ரமணி, சம்மேளனத்தின் தேசியச் செயலர் டி.எஸ். நடராஜன், ஆந்திர மாநிலப் பொதுச்செயலர் சிவப்பிரசாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர்.

சாரதா நூற்றாண்டு

தொடர்ந்து எழுத்தாளர் சாரதா நடராஜன் நூற்றாண்டு விழா, ஜனமித்திரன் இதழ் நூற்றாண்டு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்டத் தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா தலைமை வகித்தார். ஜனமித்திரன் இதழ் குறித்து ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் சாரதா குறித்து லட்சுமி நாராயணன், த. அறம் ஆகியோர் பேசினர். புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ் இளங்கோ, முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஸ்டாலின் சரவணன், அம்பிகா கல்வி அறக்கட்டளை நிறுவனர் சந்திரா ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

 முடிவில், மாவட்டத் துணைச் செயலர் துவாரகா சுவாமிநாதன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top