Close
ஜனவரி 8, 2025 8:05 மணி

பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்க 5.40 லட்சம் கரும்புகள் நேரடி கொள்முதல்: கலெக்டர் தகவல்..!

பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில், செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அருகில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் அருளரசு.

நாமக்கல் :

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் கரும்புகள், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க உத்திரவிட்டுள்ளது. இதற்காக பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சமயசங்கிலி, அக்ரஹாரம் பகுதிகளில் கரும்பு சாகுபடி விளைநிலங்களில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட அனைத்து அரிசி ரேசன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்பட உள்ளது.

விவசாயகளின் நலன் கருதி, தோட்டத்தில் உற்பத்தி செய்துள்ள கரும்புகளை இடைதரகர்களின்றி அரசுத் துறையினர் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக அரசு துறை அலுவலர்களைக் கொண்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் ஒரு கரும்பிற்கு ரூ.35 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 5 லட்சத்து 40 ஆயிரம் கரும்புகள் உள்ளது என வேளாண்மை துறையினர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவை தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு விவசாயிகள் அதிக பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்துள்ளனர் என்று கூறினார். கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு உள்பட அரசுத் துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top