Close
ஜனவரி 10, 2025 2:37 காலை

கொல்லிமலையில் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரண உதவி : கலெக்டர் தகவல்..!

கொல்லிமலையில் மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து, நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற, ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல் :
கொல்லிமலையில் மர்ல விலங்கு கடித்து, 26 ஆடுகளை இழந்த 11 பேருக்கு மொத்தம் ரூ. 78 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில், கால்நடைகளைத் தாக்கும், மர்ம விலங்குகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் கலாநிதி முன்னிலை வகித்தார்.

கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அரியூர்நாடு, குண்டூர்நாடு, வாழவந்திநாடு ஆகிய பஞ்சாயத்துகளில், கடந்த ஒரு வாரமாக, மர்ம விலங்குகள் ஆடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்துக் கொன்று வருகிறது.

கடந்த டிச. 23 முதல், ஜன. 3 வரை ஆரியூர் நாடு பஞ்சாயத்து, கிழக்குவளவு பகுதியில் 2 ஆடுகள், குண்டூர்நாடு பஞ்சாயத்து இளங்கியம்பட்டியில் 2 ஆடுகள், நத்துக்குழிப்பட்டியில் 3 ஆடுகள், வெள்ளக்குழிப்பட்டியில் 6 ஆடுகள், தீவெட்டிக்காட்டில் 8 ஆடுகள் மற்றும் வாழவந்திநாடு பஞ்சாயத்து திண்டூர்பட்டியில் 7 ஆடுகள் என மொத்தம் 26 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து இறந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில், சிறப்புக்குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மர்ம விலங்கு நடமாட்டம் தொடர்பாக, 33 இடங்களில் ஆட்டோமேட்டிக் கேமரா பொருத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொல்லிமலை பகுதிகளில் ஆரியூர் நாடு, குண்டூர் நாடு மற்றும் வாழவந்தி நாடு உள்ளிட்ட பகுதிகளில் மர்ம விலங்கு கடித்து 26 ஆடுகளை இழந்த, 11 பேருக்கு ரூ. 78,000 நிவாரண தொகை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

அரசுத்துறை சார்பில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ சுமன், கொல்லிமலை வனச்சரக அலுவலர் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top