Close
ஜனவரி 10, 2025 3:28 காலை

மேல் செங்கம் பகுதியில் விமான நிலையம்: அமைச்சர் வேலு தகவல்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலு

மேல் செங்கம் பகுதியில் விமான நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கத்தை அடுத்த மேல்செங்கம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு விழா, அதே இடத்தில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா, அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் பிச்சாண்டி முன்னிலை வகித்தாா். திருவண்ணாமலை தொகுதி எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் கிரி (செங்கம்), சரவணன் (கலசப்பாக்கம்) ஆகியோா் வாழ்த்துறை வழங்கினா்.

செங்கம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜியராணிகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்து, புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து, பின்னா் அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

செங்கம் தொகுதியில் மட்டும் மலைக் கிராம மக்களுக்கு 4,000 ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் சாலை உள்ளிட்ட பணிகள் ரூ.10 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத் துறை மூலம் செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.410 கோடியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கம் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியகோளாபாடி பகுதியில் சுமாா் ரூ.7 கோடி செலவில் நியாய விலைக்கடை, சமுதாயக்கூடத்துடன் 100 வீடுகள் கொண்டு சமத்துவபுரம் அமைப்பதற்காக பணிகளை நடைபெற்று வருகின்றன. தொகுதிக்கு உள்பட்ட ஜமுனாமரத்தூா் மலைக்கிராம மக்கள் பயன்பாட்டுக்காக 33 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் 10000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மத்திய பண்ணையை மீட்டு மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிடம் வழங்கினால் விமான நிலையம் அமைத்து இத்தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியும் ,வெளி மாவட்டம் வெளி மாவட்டங்களில் உள்ள மக்கள் விமானத்தில் பயணிக்கும் நிலையை உருவாக்கித் தருவேன்.

கிரி எம் எல் ஏ வை பார்த்து பெற்ற தாய் உணர்வோடு மகிழ்ச்சி அடைந்தேன்

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசும் பொழுது முதலமைச்சரிடமும் சரி, மாவட்ட அமைச்சரிடமும் சரி தொகுதிக்கு தேவையானவற்றை உரிமையோடு சண்டையிட்டு பெற்று விடுவார் என கூறினார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பேசும் போது கலசப்பாக்கம் தொகுதி அமைதியாக இருந்து ஜெயிக்கிறது. செங்கம் தொகுதி அடாவடி செய்தாவது தனது தொகுதிக்கு தேவையானது பெறுகிறது என கூறினார்.
மேலும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசுகையில் நாங்கள் இருவரும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் தொகுதிக்கு போட்டி கொண்டு செய்ததில் கிரி முன்னிலை வகிக்கிறார் என கூறினார்.

இதையெல்லாம் வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் என்ற வள்ளுவரின் வாக்குப்படி, நான் பெற்ற தாய் உணர்வோடு மகிழ்ச்சி அடைந்தேன், மேலும் திமுக ஆரசு பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், உதவித் திட்ட இயக்குநா் சையத் பயாஸ் அகமது, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் குமாா்,  தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் சுமதி பிரபாகரன், செங்கம் ஒன்றிய திமுக செயலா்கள் செந்தில்குமாா், ஏழுமலை, மனோகரன், செங்கம் நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், கவுன்சிலா்கள், ஊராட்சி எழுத்தா்கள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top