Close
ஜனவரி 15, 2025 9:39 மணி

தூய்மை அருணை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்

பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம் துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 8 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அமைப்பாளராக கொண்டு தூய்மை அருணை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பிற்கு 4 மேற்பார்வையாளர்களும் 39 வார்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களும் மாடவீதி தூய்மை பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்களும் ஒவ்வொரு வார்டுகளுக்கும் 25 தூய்மை காவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் கால்வாய் பராமரித்தல், மரம் நடுதல், சாலைகளை சுத்தம் செய்தல், தூர் வாருதல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் விழா

திருவண்ணாமலை திருமஞ்சன கோபுரத் தெருவில் உள்ள தூய்மை அருணை அலுவலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தூய்மை அருணை மேற்பார்வையாளர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார்.
மேற்பார்வையாளர்கள் அண்ணாதுரை எம்பி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன் முன்னிலை வகித்தனர்.

ஒருங்கிணைப்பாளர் கார்த்தி வேல்மாறன் அனைவரையும் வரவேற்று பேசினார். பொதுப்பணித்துறை அமைச்சரும் தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது; தூய்மை அருணை அமைப்பு என்பது அரசியல் சாரா அமைப்பு. இதில் மாணவர்கள் அரசு ஊழியர்கள் வணிகர்கள் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் என பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் உள்ளனர்.

திருவண்ணாமலை ஒரு புகழ் பெற்ற ஆன்மீக பூமி. அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் வருகின்றனர். எனவேதான் திருவண்ணாமலை மாட வீதி கிரிவலப் பாதை நகரப் பகுதி அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அமைப்பை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நடத்தி வருகிறோம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று குப்பைகளை அகற்றுவது கால்வாய்கள் சுத்தம் செய்வது மரக்கன்றுகள் நடுவது என பல்வேறு பணிகள் செய்து வருகிறோம்.
கடந்த எட்டு ஆண்டுகளாக மரம் நடுதல் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது என்பதை நமது இலக்காக கொண்டு செயலாற்ற வேண்டும். உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என பேசினார்.

நிகழ்ச்சியில்  ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.ஏ.ஆறுமுகம்,  விஜயராஜ், வழக்கறிஞர் சீனிவாசன் மாமன்ற உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top