Close
ஜனவரி 15, 2025 1:53 மணி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் உழவர் சந்தையில் 3 நாட்களில் 141 டன் காய்கறி விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், 3 நாட்களில், ரூ. 63 லட்சம் மதிப்பில். 141 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றது.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை செயல்படும் உழவர் சந்தையில், நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, கடந்த, 3 நாட்களில், வழக்கத்தைவிட, உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 524 விவசாயிகள் காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 3 நாட்களும் சேர்த்து, மொத்தம் 1 லட்சத்து 8,615 கிலோ காய்கறிகள் மற்றும் 32,715 கிலோ பழங்கள், 50 கிலோ பூக்கள் என மொத்தம் 1 லட்சத்து, 41,380 கிலோ எடையுள்ள விளை பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
மொத்தம் 28,276 பொது மக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். அதன் மூலம் ரூ. 63 லட்சத்து 4,940 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி தக்காளி 1 கிலோ ரூ. 20, கத்திரி ரூ. 40, அவரை ரூ. 110, பீர்க்கன் ரூ. 48, கொத்தவரை ரூ. 50, சின்ன வெங்காயம் ரூ. 65, பெரிய வெங்காயம் ரூ. 40, இஞ்சி ரூ. 50, பூண்டு ரூ. 270 என விற்பனையானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top