தன்னாட்சி அமைப்பு, மக்களின் குரல் அமைப்புகளின் சார்பில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தக் கோரி சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டும் பயணம் நேற்று குடியரசு தினத்தை (26.01.2025) முன்னிட்டு சென்னையில் தொடங்கப்பட்டது. 27.01.2025 அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இப்பயணம் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சித் தலைவர்கள் பங்கேற்றதுடன் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் முடியும் முன்பே கலைப்பதும் நியாயம் இல்லை. அதே போல ஐந்து ஆண்டுகள் பதவி முடிந்ததும் தனி அலுவலர்கள் மூலம் நிர்வாகம் செய்வதும் நியாயம் இல்லை.
எனவே, 28 மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்திட வேண்டும் என வலியுறுத்தினர். ஊராட்சி நிர்வாகத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் தேவரியம்பாக்கம் அஜய்குமார், கருப்படைத்தட்டை வெங்கடேசன், லெனின்குமார், பரத், வள்ளி செல்வம் உள்ளிட்ட பல ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
தன்னாட்சி அமைப்பு சார்பில் சரவணன், நந்தகுமார் சிவா ஆகியோரும், மக்கள் குரல் அமைப்பு சார்பில் சாரு கோவிந்தன் ஆகியோரும் பங்கேற்றனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள் தற்போது பதவி வகித்து வந்தாலும், 28 மாவட்டங்களில் ஊராட்சித் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கள் ஆதரவினை தெரிவித்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்ததுடன் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் எங்கள் அமைப்புக்களின் பயணம் தொடரும் என தெரிவித்தனர்.