பா.ஜ.க தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிமை கண்டித்து கடையம் அருகே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் செருப்பை, தபால் மூலம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனியை செருப்பால் அடிப்பேன் என்று பேட்டி ஒன்றில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கண்டிக்கும் விதமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியினர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் தபால் நிலையத்தில், தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் இளைஞரணியினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல்காதர் தலைமையில், செருப்பால் அடித்து பார் என்று வாசகங்கள் எழுதி, வேலூர் இப்ராஹிமுக்கு செருப்பை அனுப்பி வைத்து கோஷங்கள் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கருத்து சுதந்திரம் சிதலமடைந்துள்ளது. தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி, ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக உள்ளார். அவரை விமர்சனம் என்கிற பெயரில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசிய இப்ராஹிமுக்கு செருப்பை அனுப்பி உள்ளோம். தொடர்ந்து இவ்வாறு பேசினால் தங்கள் பகுதியில் வரும்போது நாங்கள் செருப்பால் அடிப்போம் என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.