பேளுக்குறிச்சி அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த கட்டிட காண்ட்ராக்டர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி பகுதியில் கடந்த 31ம் தேதி மாலை கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
மாணவி கடந்தல் சம்பவ்த்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான, சிங்களாந்தபுரத்தை சேர்ந்த தமிழ்பாண்டியன் (32), தமிழ்செல்வன் (25), கார்த்தி (32), மோகனூர் தாலுகா ஆரியூரைச் சேர்ந்த ரமேஷ் (31) மற்றும் இவர்கள் தங்குவதற்கு இடமளித்த தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பூவரசன் (34) மற்றும் மாயக்கண்ணன் (27) ஆகிய 6 பேரை, புகார் செய்த 24 மணி நேரத்திற்கு போலீசார் சுற்றிவளைத்து கைது கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து மாணவி கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டிட காண்ட்ராக்டரான தமிழ்பாண்டியன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு; கடத்தப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தைக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அப்போதிலிருந்து கடத்தப்பட்ட கல்லூரி மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டு, அவர் மாணவியின் தந்தையிடம் பெண் கேட்டுள்ளார்.
தமிழ்பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று 2 மகன்கள் உள்ளதாலும், அவரின் மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டதாலும், கல்லூரி மாணவியின் தந்தை பெண் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால், தமிழ்பாண்டியன் தனது நண்பர்களான தமிழ்செல்வன், கார்த்தி, ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து மாணவியை கடத்தி, தன்னிடம் இரண்டு ஆண்டுளுக்கு முன்பு மேஸ்திரியாக வேலை செய்த பென்னாகரத்தைச் சேர்ந்த பூவரசன் மற்றும் மாயக்கண்ணன் ஆகியோரது வீட்டில் தங்க வைத்து, திருமணம் செய்ய முயற்சித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 6 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் ரிமாண்ட் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்று, பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் எவரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர்ராஜேஷ்கண்ணன் எச்சரித்துள்ளார்.